பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28 தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பீகாரில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்றுவருகிறது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணிக்கும் ஆர்.ஜே.டி. - காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிவதற்காக லோக்னிட்டி-சி.எஸ்.டி.எஸ் என்ற அமைப்பு பீகாரில் கருத்துக்கணிப்பு நடத்தியது. தேர்தலுக்கு முந்தைய இந்தக் கருத்துக் கணிப்பில்  நிதிஷ்குமார் தலைமையிலான அணியே மீண்டும் வெற்றி பெறும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிஷ்குமார் செல்வாக்கு சரிந்திருந்தாலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அவருடைய கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாகவும் தேர்தல் கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்தலில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி 133 முதல் 143 இடங்கள் வரை வெல்லும் என்றும் ஆர்.ஜே.டி. - காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கு 88 முதல் 98 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இக்கருத்துக்கணிப்பில் 30 சதவீதம் பேர் நிதிஷ்குமாரை முதல்வராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்கள். 27 சதவீதம் பேர் 30 வயதான தேஜாஷ்வி யாதவை விரும்புகிறார்கள்.