பேச்சால் வளர்ந்தவைதான் திராவிட இயக்கங்கள் கோவையில் அண்ணாதுரை பேசுகிறார் என்றால் கரூரிலிருந்து வண்டிகட்டிக் கொண்டு வயசுக்கு வந்த மகள், வாயும் வயிறுமாய் இருக்கும் மனைவியையும் சேர்த்துக் கொண்டு குடும்பம் குடும்பமாய் வருவான் தொண்டன். பொண்டு பிள்ளைகளையும் அழைத்து வந்து கேட்குமளவுக்கு அவர்களின் அரசியலில் நாகரிகம் இருந்தது, பேச்சில் பக்குவம் இருந்தது. 

அண்ணாவிடம் அக்கலையை கற்ற கருணாநிதியாகட்டும், அவது மகன் ஸ்டாலினாகட்டும், அரசியலில் தனக்கென ஒரு ராஜபாட்டையை அமைத்த ஜெயலலிதாவாகட்டும் ஆவேசமாக அரசியல் பேசுவார்களே தவிர தனி நபர் தாக்குதலில் எல்லை மீறி நடக்க மாட்டார்கள். ‘ஜெயலலிதா அம்மையார்’ என்பதை தாண்டி ஸ்டாலின் சென்றதில்லை, ‘கருணாநிதி’ என்பதை தாண்டி ஜெயலலிதா போனதில்லை. கருணாநிதியோ ‘ஜெயலலிதா என் மகள் போன்றவர்’ என்று ஒரு பேட்டியில் சொல்லுமளவுக்கு அரசியல் நாகரிகத்தை காத்தார்கள். 

ஆனால் தங்கள் கொடியில் அண்ணாதுரையின் உருவத்தை பொறித்திருக்கும் அ.தி.மு.க.வில் இன்று நடக்கும் சண்டைகள் குழாயடி குஸ்தியை விட படு கேவலமாக தரையிறங்கிக் கொண்டிருக்கின்றன. 
சில உதாரணங்களைப் பார்ப்போம்...

தினகரன் அணியின் நாஞ்சில் சம்பத்  ஒரு பேட்டியில் பன்னீர்செல்வத்தை பிளந்து கட்டுகிறார். துவக்க காலத்தில் ஓ.பி.எஸ்.ஐ ‘முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்.’ என்று விளித்தவர், பின் ‘பன்னீர் செல்வம்’ என்றவர், பின் ’ஓ.பி.எஸ்.’ என்றவர், அதற்குப்பின் ‘பன்னீர்’ என்றவர் இன்றோ அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுகிறார்.  தினகரனிடமான தனது விசுவாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிட நாஞ்சில் எடுத்திருக்கும் இந்த டிரெண்ட் அரசியலுக்கு மிக மோசமான முன்னுதாரணம் எனலாம். அவன், இவன் என்று பேச ஆரம்பித்துவிட்ட நாக்கு இனி அடுத்த லெவலுக்கு போக எத்தனை நாளாகும்? என்னதான் அரசியல் குரோதமிருந்தாலும் இந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த மனிதரை , தன்னை விட பெரியவரை இப்படித்தான் என்றில்லாமல் சம்பத் வறுத்தெடுக்கும் விதம் இலக்கியம் போற்றும் ’நாஞ்சில்’ நாட்டுக்கே கேவலம். 

சமீபத்தில் வழங்கிய ஒரு வீடியோ பேட்டியை கவனியுங்கள். ஒரு மூத்த அரசியல்வாதியை அசிங்கமாக பேசுகிறோம் என்கிற லஜ்ஜை சிறிதுமின்றி நாக்கை மடித்து, இழுத்து அவர் பேசும் தொனியும், பிரயோகிக்கும் வார்த்தைகளும் அதிர்ச்சியை தருகிறது. பன்னீரை மட்டுமல்ல தன்னை விமர்சிக்கும் எவரையும் மோசமாகவே சித்தரிக்கிறார். 
‘பன்னீர் செல்வம் காட்டிக் கொடுத்தவன். ஆட்ஸ்ஸ்ஸ்ஸியை, கட்ஸ்ஸ்ஸியை, தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுத்தவன். 
அம்மா எனது பணிக்கு வழங்கிய இன்னோவா காரை, எனக்கு கொடுத்ததாக சொல்பவனெல்லாம் மூளையில்லாத முட்டாள்கள்.

பன்னீர் செல்வம் ஒரு புறம்போக்குங்க. அய்யய்யய அவனையெல்லாம் ஒரு கேரக்டராவே பார்க்காதீங்க. துரோகிகளுக்கு ஏன் மீடியாக்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறீங்க?” என்று அடுத்து தமிழிசையை பற்றி பேசுபவர் அடுத்து ‘தமிழக பி.ஜே.பி. யோட குரலையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க, தமிழிசையோட குரலெல்லாம் யார்  காதையும் போய் சேராது. யாரும் அவங்களை ஏத்துக்கமாட்டங்க. பி.ஜே.பி.ங்கிறது இந்தியாவை பிடித்த சாபம்.’’

சம்பத் இப்படியென்றால் பன்னீர் அணியின் முணுசாமியின் போக்கும், பேச்சும் உலகத்துக்கே தெரியும். ஆனால் இன்னும் நாஞ்சில் அளவுக்கு அவர் நாராச வார்த்தைகளுக்குள் இறங்காதது ஆறுதல். ஆனால் அந்த கட்டுப்பாடு என்று உடைபடுமோ? என்கிற பயம் எல்லோருக்கும் இருக்கிறது. 

இந்த இரு அணியினரும் இப்படியிருக்க எடப்பாடி அணியிலாவது பேச்சில் பண்பாடு இருக்குமா என்று கவனித்தால்....இந்த தேசத்தின் அரசியலில் தன்னையும், தங்கள் அணியின் சிலரையும் தவிர வேறு யாருக்கும் எதற்கும் தகுதியில்லை, தகுதியில்லை, அருகதையில்லை, மதிப்பில்லை, மரியாதையில்லை என்று மானாவாரியாக போட்டுத்தாக்கி மாற்று அணியினரை ஆவேசப்படுத்துவதே அமைச்சர் ஜெயக்குமாரின் பிழைப்பாக இருக்கிறது. 

சரி, அ.தி.மு.க. வளர்த்தெடுத்த அரசியல் பேர்வழிகளுக்குதான் நாக்கில் அடக்கம் இல்லை! என்று நினைத்தால் ஜெ., குடும்பத்தின் அங்கத்தினரான தீபாவின் பண்பு கடந்த ஞாயிறன்று வேதா நிலைய வாசலில் வாந்தியெடுத்துவிட்டது.
தன் தம்பி தீபக்கை பார்த்து அவர் பேசிய வார்த்தைகள், தலைமை கழகத்தின் முதல் தளத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை...

‘’ச்சீ எச்சக்கல, பிச்சக்காசுக்காக இப்படி பண்ணாத போ. மூஞ்சியிலேயே முழிக்காத இனிம. மாமாவ (மாதவனை) கை நீட்டுற நீ? இனிமே மூஞ்சியிலேயே முழிக்காத போ.” என்கிறார்.

பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுக்கும்போதோ ‘’இவன் பொறம்போக்கு சசிகலா கூட சேர்ந்து அத்தையைவே கொன்ன பாவிங்க. பெத்த குழந்தை மாதிரி பார்த்துக்கிட்ட அத்தையை கொன்னுட்டார்.” என்று வெடிக்கிறார்.
தீபக்கோ ‘தீபா என் மேலே புகார் கொடுத்தா, ஜாலியா சரண்டராகி, சந்தோஷமா புழலுக்கு போயிடுவேன். அங்கே சிக்கனெல்லாம் போடுறாங்களாமே! சாப்பிட்டு ஜாலியா இருக்க வேண்டிதான்.” என்று பவித்ரமான குடும்ப மானத்தை ஓட்டைப் படகேற்றி ஓலமிடுகிறார். 

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று எதிர்கட்சியினரின் வாதத்திற்கும் மரியாதை கொடுத்து பேசிய அண்ணாவின் வழி வந்த கட்சியில் நடக்கும் கூத்துகள் காலத்தின் கோலமா அல்லது விதி செய்யும் சதியா?!