ஹெச்.ராஜாவே, எங்கள் மண்ணை விட்டு, நீங்கள் உங்கள் பெட்டி, படுக்கையுடன் உங்கள் மண்ணுக்குப் போய்ச் சேருங்கள் என திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கொந்தளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பெரியார் சிலை குறித்து எச்.ராஜா சமீபத்தில் ஃபேஸ்புக்கில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்துவிட்ட நிலையிலும் தொடர்ந்து அவருக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று விஷால் உள்பட ஒருசில திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது கண்டனத்தை பதிவு செய்து ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

``பெரியார் என்பவர் தனி மனிதன் அல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் அடையாளம். இந்த அடையாளத்தை அவமானப்படுத்தும் எதையும் எங்களால் தாங்க முடியாது. மூடநம்பிக்கையை உடைத்து, பெண்ணடிமையை எதிர்த்து போராடிய பெரியாரை வாய் கூசாமல் தேசத் துரோகி எனக் கூறும் ஹெச்.ராஜாவே, நீங்கள் பேசியது பெரியாருக்கு எதிரான பேச்சு அல்ல; ஒட்டுமொத்த தமிழனத்திற்கு எதிரானது. 

பெரியாரின் சிலை, சாதி வெறியர்களின் சிலை இல்லை. ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளம். ஹெச்.ராஜாவுக்கு ஒரு முடிவில்லை என்றால், அவர் தமிழகத்தை கலவர பூமியாக்கிவிடுவார். ராஜா கேட்ட மன்னிப்பை உற்று கவனித்தால் தெரியும், அதில் உண்மை இல்லை என்பது. எனவே ஹெச்.ராஜாவே, எங்கள் மண்ணை விட்டு, நீங்கள் உங்கள் பெட்டி, படுக்கையுடன் உங்கள் மண்ணுக்குப் போய்ச் சேருங்கள். அப்படியென்றால்தான் நாங்கள் எங்கள் மண்ணையும் மொழியையும் தன்மானத்தையும் காப்பாற்ற முடியும். இதுவே உங்களுக்கு அளிக்கப்படும் சிறப்பான தண்டனை’’ என்று பேசியுள்ளார்.