bharathiraja criticize rajinikanth
ரஜினி யோக்கியராக இருந்திருந்தால், வைரமுத்துவின் வரிகளில் புகழை அறுவடை செய்த ரஜினி, வைரமுத்துவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்திருக்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன. பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவை இழிவாக விமர்சித்தார். பாஜக தமிழக துணை தலைவரான நயினார் நாகேந்திரன், வைரமுத்துவின் நாக்கை அறுத்து வருபவருக்கு பரிசுத்தொகை அறிவித்ததோடு, இந்து தெய்வங்களை அவதூறாக பேசுபவர்களை கொலை செய்ய வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் ஆகியோரின் பேச்சுக்கு இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்துவின் வரிகளுக்கு நடித்து வளர்ந்தவர் ரஜினி. ரஜினி யோக்கியராக இருந்திருந்தால், வைரமுத்துவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஆதரவு குரல் எழுப்பவில்லை. தற்போது அரசியலுக்கு வருவதாக கூறும் ரஜினி, யோக்கியராக இருந்திருந்தால், தனது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும்போதே ரசிகர்களை தடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. முட்டாள்களை மேலும் மேலும் அடிமுட்டாளாக்கி அதன் மூலம் பலனடைந்தார் என ரஜினியை பாரதிராஜா கடுமையாக விமர்சித்து பேசினார்.
