பாரத் நெட் டெண்டர் ரத்து குறித்தும் அதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் ஆ.ராசா அமைச்சர் உதயக்குமார் மீது குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலடியாக அமைச்சர் உதயக்குமார் 2ஜி யில் 1லட்சம் கோடி ஊழல் கதையை எடுத்து விட்டிருந்தார். மீண்டும் அமைச்சர் உதயக்குமாருக்கு பதிலளித்த எம்பி. ஆ. ராசா தகுதியற்றவர்களின் தகுதி விரைவில் தீர்மானிக்கப்படும் என்றும் அணையப்போகும் திரி பிரகாசமாக எறியும் என்றும் எச்சரிக்கையாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்..."நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழலில் முதலமைச்சருக்கு எதிரான ஊழல் புகாரில் போதுமான முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும், உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற ‘தடித்ததோலு’க்கு  சொந்தக்காரர்தான் எடப்பாடி பழனிசாமி என்பதை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.  அப்படிப்பட்டவருக்கு முட்டுக்கொடுத்து என்னை வசைபாட வேண்டிய அவசியத்திற்கு அமைச்சர் உதயகுமார் ஆளாகியிருப்பது புரியாத புதிரல்ல.12000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு கண்ணாடியிழைக் கம்பி (Optic Fiber Cable) இணைப்புகள் அமைப்பதற்காக சுமார் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்ட திட்டத்திற்கான ஒப்பந்த நிபந்தனைகள் முறைகேடு செய்வதற்கு ஏதுவாக தளர்த்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக உறுதி செய்த மத்திய அரசு, அந்த ஒப்பந்தத்தையே இரத்து செய்திருப்பது உதயகுமாரின் நேர்மைக்கு கொடுக்கப்பட்ட பட்டயம். அ.தி.மு.க. அமைச்சர்களின் எல்லா முறைகேடுகளையும் மூடிமறைக்க எல்லா விதத்திலும் முயற்சிக்கும் மத்திய அரசாலேயே மறைக்க முடியாத இத்தகைய முறைகேட்டை செய்த இந்த சாமர்த்தியசாலிதான் இப்போது என் தகுதி பற்றி பேசுகிறார். என் மீதான வழக்கை நானே எதிர்கொண்டு- உங்கள் "அரசியல் புனிதத் தாயை"ப் போல்  ஆண்டுகள் பலவாக ஓடி ஒளியாமல் - ஒரு நாள்கூட வாய்தா வாங்காமல்- நானே சாட்சி கூண்டில் ஏறி , சிபிஐ-யின் குறுக்கு விசாரணையை எதிர்கொண்டு வழக்கை வென்றவன் என்பது மட்டுமல்ல;  என் மீது தொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை ‘ஜோடிக்கப்பட்டது’ (choreographed charge-sheet) என்று நீதிமன்ற தீர்ப்பிலேயே உறுதி செய்யப்பட்டது என்பது உதயகுமார் போன்ற அரசியல் அடிவருடிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தன் மீதான ‘பாரத் நெட்’ ஒப்பந்த முறைகேட்டில் மத்திய அரசுக்கு பணிந்து தன் பதவியை எடுத்து விடுவாரோ என்ற பயத்தில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழும் எடப்பாடிக்காக இன்னொரு ஊழல் பேர்வழி பரிந்து பேசுவதில் நமக்கொன்றும் வியப்பில்லை.  பாவம், விபத்தில் விளைந்த பதவியும் பவிசும் முடிவுக்கு வரும் நேரம்.  அணையப்போகும் திரி கடைசி நிமிடத்தில் கூடுதல் வெளிச்சம் காட்டுவது மாதிரி உதயகுமாரின் உளறல் உரத்து ஒலிக்கிறது.  விரைவில் அமைய இருக்கும் தி.மு.க. ஆட்சியில் தகுதியற்ற இவர்களின் தகுதி தக்க நேரத்தில் தீர்மானிக்கப்படும்.  அதுவரையாவது இவர்கள் அமைதி காப்பது அவர்களுக்கு நல்லது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.