இரட்டை இல்லை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க முயன்றது தினகரன். இடை தரகராக செயல்பட்டது சுகேஷ் சந்திரா. வாங்க தயாராக இருந்தது யார்? என்ற கேள்விக்கு மட்டும் இதுவரை பதில் இல்லை.

அப்படி என்றால், அரசியலில் பிடிக்காத ஒருவரை ஒழித்து கட்ட பின்பற்றப்படும் சராசரி பார்முலாதான்  தினகரன் கைதுக்கு காரணமா? என்ற கேள்வி எழுகிறது.

தினகரன் கைது  நடவடிக்கை என்பது  சாணக்கியன் கூற்றுப்படி  ராஜ நீதியாக இருக்கலாம்.   மனசாட்சிப்படி பார்த்தால், பழி வாங்கும் படலத்தை தவிர வேறு எதுவும் இல்லை.

இந்தியாவில் 65 சதவிகித  மக்கள் லஞ்சம் கொடுத்து தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளுகின்றனர் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வரும் தகவல்.

65 சதவிகித  மக்கள் மற்றும் அந்த லஞ்சத்தை பெறுபவர்கள்   அனைவரும் கைது செய்யப்பட்டால் உண்மையில் வரவேற்கலாம்.

ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக, 99 பேரை விட்டுவிட்டு ஒருவரை மட்டும் வாட்டி வதைப்பது எந்த வகையில் நியாயம்.

தினகரன் விஷயத்தில் காட்டிய தீவிரத்தை ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு பகுதியிலும் காட்டினால், லஞ்சம் என்ற வார்த்தையை கூட புழக்கத்தில் இல்லாமல் செய்திருக்கலாம்.

அதேபோல், பணம் இருந்தால் எதையும் வாங்கி விடலாம், சாதித்து விடலாம் என்ற மன நிலையை கூட ஒழித்து விடலாம்.

இதில் எதையும் செய்யாமல், லஞ்சம் கொடுக்க முயன்ற தினகரனையும், இடைத்தரகராக செயல் பட்ட சுகேஷையும் கைது செய்துள்ள போலீசார், லஞ்சம் பெறுவதற்கு முயற்சித்தவர் யார்? என்பதை ஏன் இதுவரை கூறவில்லை என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

இது போன்ற சம்பவங்களால்தான்,  சகாயம் போன்றவர்கள்  லஞ்சம்  ஒழிக்கப்படவேண்டும்  என சொல்வதை கேட்டு  இந்த சமூகம் கேலி செய்கிறது.