நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிக்க அதிமுகவில் பலரையும் சமாதானம் செய்ய வேண்டியிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மே 19 அன்று திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இந்த நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க அதிமுக தலைமை  திணறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் பலரும் வேட்பாளர்களை அறிவிப்பதில் முட்டுக்கட்டை போட்டதால், வேட்பாளர்களை இறுதி செய்வதில் கட்சித் தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜியை எதிர்க்க தனது ஆதரவாளருக்கு ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையுடன் முட்டி மோதியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிமுகவில் இருந்தபோதே செந்தில் பாலாஜிக்கு எதிராகச் செயல்பட்டுவந்த செந்தில்நாதன் பெயரை முதல்வர் பழனிச்சாமி ‘டிக்’ அடித்ததாகக் கூறப்படுகிறது.
2011-ல் அரவக்குறிச்சியில் செந்தில்நாதன் வெற்றி பெறாமல் இருக்க செந்தில் பாலாஜி உள்ளடி வேலை செய்ததாக கரூர் அதிமுகவில் பேச்சு வந்தது. அப்போது முதலே செந்தில் பாலாஜியும் செந்தில்நாதனும் எதிரும் புதிருமாக மாறினர். இப்போது அதற்கு பழி தீர்க்க செந்தில்நாதனை அதிமுக களமிறக்கியுள்ளது. மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும், பின்னர் சமாதானமாகி ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
இதேபோல திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தனது ஆதரவாளரை வேட்பாளராக அறிவிப்பதில் அமைச்சர் செல்லூர் ராஜூம் முட்டி மோதியிருக்கிறார். மதுரை எம்.பி. தொகுதிக்கு கோபாலகிருஷ்ணணை வேட்பாளராக அறிவிக்க தலைமையை செல்லூர் ராஜூ கேட்டிருந்தார். ஆனால், கட்சித் தலைமை ராஜன் செல்லப்பா மகனுக்கு சீட்டு ஒதுக்கியது. எனவே திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தனது ஆதரவாளரை வேட்பாளராக நியமிக்க கேட்டதாகவும் கூறப்படுகிறது.


துணை முதல்வர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருடன் உடன் வந்த திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கத்துக்கு திருப்பரங்குன்றம் தொகுதி சீட்டைப் பெற்று தர ஓபிஎஸும் முயற்சி செய்துள்ளார். ஆனால், செல்லூர் ராஜுவின் பிடிவாதத்தால், ஓபிஎஸ் முயற்சி பலிக்கவில்லை. எனவே செல்லூர் ராஜூவின் ஆதரவாளரான அவனியாபுரம் பகுதிக் கழகச் செயலாளர் எஸ்.முனியாண்டிக்கு திருப்பரங்குன்றம் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சூலூர் தொகுதிக்கு கோவை முன்னாள் மேயரும் முன்னாள் அமைச்சருமான செ.ம.வேலுசாமி முயற்சி செய்தும், அமைச்சர் வேலுமணியின் எதிர்ப்பால் மறைந்த சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜின் தம்பி வி.பி.கந்தசாமிக்கு ‘சீட்’ ஒதுக்கப்பட்டதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.