சமைக்க தலைவர் சரத்குமாருக்கு திடீரென திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து செய்தியில்  பாராட்டுதலையும், போற்றுதலையும் என மானாவாரியா பாராட்டி தள்ளியதை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

காமராஜர் பிறந்தநாளில் அவர் பிறந்த  மண்ணில் சரத்குமார் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள “காமராஜர் மணிமண்டபம்” திறப்பு விழாவிற்கு  ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சரத்குமாருக்கு அனுப்பிய வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்; கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் நடைபெறும் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தலைவர் பிறந்த மண்ணில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் - இடையறாமல் அவர் ஆற்றிய பொதுப் பணிகளுக்கும், நாட்டின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும்  ஆற்றிய தொண்டறத்திற்கும், பொதுமக்களின் உற்ற, நெருக்கமான, நயத்தகு நண்பராக, வழிகாட்டியாக, முதலமைச்சர் பொறுப்பிலிருந்து தொடர்ந்து செய்த தன்னலமற்ற சேவைகளுக்கும், நன்றி பாராட்டுவதாக அமையும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்த சீரிய முயற்சியைத் துவங்கி - வெற்றியடைந்துள்ள சகோதரர் சரத்குமார் அவர்களுக்கு எனது பாராட்டுதலையும், போற்றுதலையும்  தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், அதிமுகவிற்கு ஆதரவாகவும் அந்த கூட்டணியிலும் இருந்துவரும் நிலையில், அவரை ஸ்டாலின் பாராட்டியிருப்பது, திமுக கூட்டணியில் இணைக்க வலைவிரிக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட சரத்குமாருக்கு ஜெயலலிதா சீட் வழங்கியிருந்தார். ஆனால் சரத்குமார் தோற்றுவிட்டார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும்கூட சரத்குமார் அதிமுகவிற்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கும் ஆதரவாகவே இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சரத்குமாரை ஸ்டாலின் பாராட்டியிருப்பது அவருக்கு மறைமுகமாக வலைவிரிப்பது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது.