because of vaiko factor dmk candidate loose his deposit kidding social medias

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதில், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே, சுயேச்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரனே முன்னிலை பெற்று வந்தார். முதலிடத்தில் தினகரனும், இரண்டாமிடத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனும், மூன்றாம் இடத்தில் பல கட்சிகள் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக., வேட்பாளர் மருது கணேஷும் வந்து கொண்டிருந்தனர். 

இந்நிலையில், தினகரன் பெற்று வரும் வாக்குகள், மற்ற அனைத்து வேட்பாளர்களின் ஒட்டு மொத்த வாக்குகளின் எண்ணிக்கையையும் விட அதிகமானது. அதைவிட, அதிமுக., வேட்பாளர் மதுசூதனனைக் காட்டிலும் இரு மடங்குக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வந்தார் தினகரன். தற்போது, 19 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தினகரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டார். அதிமுக., வேட்பாளர் மதுசூதனன் மட்டுமே தேர்தல் வைப்புத் தொகையான டெபாஸிட்டைப் பெற்றார். மற்ற அனைவருமே டெபாசிட் தொகையை இழந்தனர். 

குறிப்பாக, பலரும் எதிர்பார்த்த திமுக., வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட் தொகையை இழந்தார் என்பதுதான்! பல கட்சிக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்ட திமுக., வேட்பாளர், ஒரு சுயேச்சை வேட்பாளரின் சூறாவளி உத்தியில் காணாமல் போய்விட்டார். ஒரு சுயேச்சை வேட்பாளரிடம் இத்தனை கட்சிகள் இணைந்த வேட்பாளர் படுமோசமாக வைப்புத் தொகையைக் கூட இழந்து தோல்வியைத் தழுவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு வலைத்தள வாசிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கூட்டணிக் கட்சியில் இடம்பெற்ற மதிமுக., பொதுச் செயலர் வைகோ., தானாக முன்வந்து திமுக., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார். அதனை திமுக.,வினர் ரசிக்கவில்லை என்றாலும், கூட்டணி பலம் பெறுகிறது என்று சிலர் ஏற்றுக் கொண்டனர். ஆனால், அண்மைக் காலமாக வைகோவுக்கு ஒரு ராசி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நல்ல தலைவர் என்றாலும், அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னிறுத்தி நடத்தியவர் என்றாலும், அவர் சேரும் அல்லது ஆதரவு கொடுக்கும் கட்சி, அல்லது கூட்டணி தோல்வியைத் தழுவி விடுகிறது. 

விஜயகாந்த்துக்கு வித்தியாசமான யோசனையைக் கொடுத்து படுதோல்வியைப் பரிசாக அளித்ததில் இருந்து வலைத்தளத்தில் பலரும் வைகோவின் ராசியை கடுமையாக கலாய்த்து வருகின்றனர். இது திமுக., வேட்பாளர் மருது கணேஷின் படு தோல்வியிலும் தொடர்வது வேதனை கலந்த உண்மையாகிப் போனது!