மெரினா கடற்ரையில் நினைவிடங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கை தான் வாபஸ் பெற்றுக் கொண்டதாக பத்திரிக்கைகளில் வெளிவந்த தகவல் பொய்யானது என்றும், தற்போது மெரீனாவில் உள்ள 4 சமாதிகளையும் நிச்சயம் தூக்குவேன் என்றும் டிராபிக் ராமசாமி சபதம் விடுத்துள்ளார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தி.மு.க., சார்பில், தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால்  மெரினா கடற்ரையில் நினைவிடங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் , சட்ட சிக்கல்களை காரணம் காட்டி, மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய, நிலம் ஒதுக்க, தமிழக அரசு மறுத்துவிட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு  அவசரமாக நேற்று முன்தினம் இரவும், பின்னர் நேற்றும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நினைவிடங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திக சார்பில் வழக்கறிஞர் துரைசாமி தொடர்ந்த 3 வழக்குகளும், பாமக வார்பில் வழக்கறிஞர் பாலு தொடர்ந்த 1 வழக்கும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் பத்திரிக்கைகளில் இந்த நான்கு வழக்குகளுடம் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கையும் அவர் வாபஸ் பெற்றுக் கொண்டதாக செய்தி வெளியானது. இதையடுத்து கருணாநிதியை  அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் ஒதுக்கித் தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து செய்தியளாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக தான் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெறவில்லை என்று கூறினார்.

அதே நேரத்தில் எனது கேஸை மட்டும் நீதிபதி நிறுத்தி வைத்து விட்டதாக கொந்தளித்தார். இதில் லஞ்சம் புகுந்த விளையாடிவிட்டதாகவும், பத்திரிக்கைகள்  காசு வாங்கிக்கொண்டு தவறான தகவலை வெளியிட்டு விட்டதாகவும் குற்றம்சாட்டினார். ஆனாலும் இந்தப் பிரச்சனையை இத்துடன் விடமாட்டேன் என்றும்,இதை உச்சநீதிமன்றம் கொண்டு சென்று வெற்றி பெறுவேன் என்றும் கூறினார், மேலும் கடற்கரையில் 4 சமாதிகளையும் தூக்கும் வரை ஓய மாட்டேன் என்றும் சபதம் செய்தார்.