அதிமுகவில் கட்சிக்கு விசுவாசமாக இல்லாமல் தனி நபர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்களை அடையாளும் காணும் பணியில் ஓபிஎஸ் டீம் களம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ், 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். தொடர்ந்து 3வது முறையாக அதிமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும். இதற்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டுக் கொண்டார். அப்போது வருங்கால முதல்வர் ஓபிஎஸ் என்று சிலர் முழக்கமிட்டனர். இதனை கேட்டு சற்று டென்சன் ஆன ஓபிஎஸ் தனி நபருக்கு விசுவாசமாக இருப்பதை அதிமுகவினர் தவிர்க்க வேண்டும் என்றார். தொண்டர்கள் கட்சிக்கு தான் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாக சாதாரணமாக தெரிந்தாலும் கடந்த சில வாரங்களாகவே அதிமுகவில் தனி நபர்களை முன்னிலைப்படுத்தும் லாபி செய்து வரும் அமைச்சர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை யார் யார் என ஓபிஎஸ் டீம் கணக்கெடுத்து வருவதாக சொல்கிறார்கள். அதிமுகவில் எந்த முடிவு என்றாலும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் – இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணைந்தே எடுக்க வேண்டும் என்பது இரு அணிகள் இணைந்தபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம். அதனை தற்போது வரை ஓபிஎஸ் மீறால் இருந்து வருகிறார்.

ஆனால் முதலமைச்சர் இபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த விஷயத்தில் தன்னிச்சையாக செயல்படுவதாக ஓபிஎஸ் தரப்பு துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நிர்வாகிகள் நியமனத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. இதே போல் அரசு விழாக்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை என்று ஏற்கனவே ஒரு பிரச்சனை வந்தது. இதற்கு எல்லாம் காரணம் முதலமைச்சர் இபிஎஸ்சை கட்சியிலும் ஆட்சியிலும் முன்னிறுத்த முயலும் ஒரு லாபி தான் என்று ஓபிஎஸ்க்கு ஏற்கனவே தெரியும்.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இபிஎஸ்க்கு ஆதரவான லாபி அதிமுகவில் அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் ஓபிஎஸ் அறிந்து வைத்துள்ளார். சில அமைச்சர்கள் எல்லை மீறியதால் தான் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தை மையமாக வைத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதன் பிறகு முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் யாரும் கருத்து சொல்லக்கூடாது என்று கூட்டறிக்கை வெளியானது. ஆனால் அதன் பிறகும் கூட எடப்பாடியாருக்குஆதரவான லாபி, தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஓபிஎஸ் நம்புகிறார்.

முதலமைச்சருக்கு நெருக்கமான 2 அமைச்சர்கள் டெல்லி செல்ல திட்டமிட்டதை ஓபிஎஸ் சுத்தமாக விரும்பவில்லை என்கிறார்கள். நம்மிடம் சமாதானம் பேசிவிட்டு டெல்லி மூலம் காய் நகர்த்துகிறார்களா என்று அவர் யோசிக்க ஆரம்பித்துள்ளார். இதற்கிடையே சில மாவட்டங்களில் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக இபிஎஸ்க்கு ஆதரவான போஸ்டர்கள், பிளக்ஸ்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதுவும் ஓபிஎஸ்சை அப்செட்டாக்கியுள்ளது. இந்த நிலையில் தான்தேனியில் பேசும் போது தனி நபர்களுக்கு விசுவாசம் காட்டாதீர்கள் என்று தனது ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ்  கூறியுள்ளார்.

தனது ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் இதனை கூறியதாக கருதினாலும் கூட உண்மையில் இது எடப்பாடிக்கு ஆதரவான லாபிக்கு கொடுக்கப்ப்டட எச்சரிக்கையாக சிலர் பார்க்கிறார்கள். ஏற்கனவே கட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டறிக்கை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதனையும் மீறி மறைமுகமாக சிலர் அந்தவேலையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை ஓபிஎஸ் தரப்பு கண்காணித்து வருகிறது.விரைவில் அவர்களை குறிவைத்து ஆக்சன் எடுக்கவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.