கர்நாடகத்தில் எம்.பி.க்களாக இருந்த எடியூரப்பா(சிவமொக்கா), ஸ்ரீராமுலு(பல்லாரி), புட்டராஜூ(மண்டியா) ஆகியோர் கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடகம் சார்பில் நாடாளுமன்றத்தில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 தொகுதிகள் காலியாக இருக்கின்றன.

அதுபோல் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர்  குமாரசாமி ராமநகர், சென்னப்பட்டணா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். மேலும் ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வான சித்து நியாமகவுடா, சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் கர்நாடக சட்டசபையில் ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக இருக்கின்றன.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள மண்டியா, பல்லாரி, சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகளுக்கும், சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும் கடந்த 3 ஆம்  தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பல்லாரி, ஜமகண்டி ஆகிய தொகுதிகளில் காங்கிரசும், மண்டியா, ராமநகர், சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் போட்டியிட்டுள்ளன.

மண்டியாவில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சிவராமேகவுடா, பா.ஜனதா சார்பில் டாக்டர் சித்தராமையா, சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் மது பங்காரப்பா, பாஜக  சார்பில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா, பல்லாரியில் காங்கிரஸ் வேட்பாளராக உக்ரப்பா, பாஜக வேட்பாளராக சாந்தா, ஜமகண்டியில் காங்கிரஸ் வேட்பாளராக ஆனந்த் நியாமகவுடா, பாஜக  வேட்பாளராக ஸ்ரீகாந்த் குல்கர்னி ஆகியோரும், ராமநகரில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளராக அனிதா குமாரசாமி, பாஜக சார்பில் சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

இதில் ராமநகர் பாஜக  வேட்பாளர் சந்திரசேகர் தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு திடீரென போட்டியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு இந்த ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த பணிகளில் 1,248 பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வெற்றி பெறும் கட்சிகளுக்கு இந்த இடைத்தேர்தல் முடிவு தீபாவளி பரிசாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும், கர்நாடக கூட்டணி ஆட்சிக்கோ அல்லது மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சிக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.