கோயம்பேட்டில் வரும் 28 தேதி காய்கறியோடு பழ மார்க்கெட்டையும் திறக்க வேண்டுமென தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் சென்னையில் அதிகரித்தபோது அதன் hotspot ஆக கோயம்பேடு விளங்கியது. வியாபாரிகள் தொழிலாளிகள், காய்கறி வாங்கச் சென்றோர் என ஏராளமானோருக்கு குரானா வைரஸ் பரவியது. அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிலையில் அவர்கள் சென்ற இடங்கள் எல்லாம் கொரோனா பரவியது. இதனால் கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கொரோனா வேகமெடுத்தது. 

கொரோனா பரவ காரணமான இருந்த கோயம்பேடு காய்கறி சந்தை இருந்ததால் அரசு அதை பூட்டி சீல் வைத்தது. வியாபாரிகள் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாததே கொரோனா பரவலுக்கு காரணம் என அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கோயம்பேடு காய்கறி சந்தை மாதாவரத்திற்கும், திருமழிசைக்கும் மாற்றப்பட்டது. நகருக்கு வெளியே உள்ள திருமழிசையில் மொத்த வியாபாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு வியாபாரம் போதிய அளவில் நடைபெறவில்லை, டன் கணக்கில் காய்கறிகள் வீணாகிவருகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்கி, அதை திறந்து வருமானம்  பார்க்கும் அரசு, கோயம்பேடு காய்கறி சந்தையையும் திறக்க வேண்டும் என வணிகர் சங்கங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்.

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சரை சந்தித்த பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா  செய்தியாளர்களை சந்தித்தார். அதில், திருச்சி, காந்தி மார்கெட், கோவை, வேலூர் உள்ளிட்ட தமிழக முழுவதும் பழைய இடங்களில் மீண்டும் மார்க்கெட்டை திறக்க அனுமதி கேட்டுள்ளோம். அதேபோல் கொரோனா தொற்றால் இறந்த வியாபாரிகளுக்கு
பத்து லட்சம் இழப்பீடு வேண்டும். கடைகள் அமைக்கப்பட்ட 6 மாதங்களுக்கு உள்ளாட்சி வரியை ரத்து செய்ய வேண்டும். வரும் 18 தேதி உணவு தானிய கடைகள் கோயம்பேட்டில் திறக்கும் போது, பழம், பூ மார்க்கெட் திறக்க அனுமதிக்க வேண்டுமெனவும் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.