வருமான வரித் துறையினர் நேற்று மூன்றாவது நாளாக நடத்திய சோதனையின் முடிவில்  எஸ்பிகே நிறுவனத்துக்குச் சொந்தமான 15 வங்கிக் கணக்கு லாக்கர்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக நெடுஞ்சாலைத் துறை காண்ட்ராக்டர்  செய்யாதுரை செய்யாதுரை, மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, ஈஸ்வரன் மற்றும்  பாலசுப்பிரமணியன் வீடுகள், மற்றும் அவர்களது உறவினர்கள் என்று அந்தக் குடும்பத்தை மட்டுமேதான் குறிவைத்துக் களமிறங்கினார்கள். நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கிய இந்த மெகா ரெய்டு சுமார் 36 மணி நேரத்துக்குப் பின் நேற்று முடிவடைந்தது.    

ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் நடந்த இந்த ரெய்டில் சென்னையில் பல இடங்களில் பார்க் செய்யப்பட்டுள்ள கார்களில் பணம் பதுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 30 இடங்களில் நேற்று நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 170 கோடி ரொக்கம் மற்றும் 105 கிலோ தங்கம் முதல் இரண்டு நாட்கள் சோதனையில்  மூட்டை மூடடையாக பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பூரில் 81 கிலோவும் தாம்பரத்தில் 19 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அருப்புக்கோட்டையில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

அதேபோல சென்னை மற்றும் அருப்புக்கோட்டையில் 15க்கும் மேற்பட்ட வங்கிகளில் உள்ள எஸ்பிகே நிறுவனத்தின் கணக்குகளைச் சோதனை செய்தனர். சோதனைக்குப் பின்னர் வங்கி லாக்கர்களுக்கு சீல் வைத்தனர். எஸ்பிகே நிறுவனத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளில் எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளக் கூடாது எனச் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். மேலும் இந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தியதில். அருப்புக்கோட்டையில் எஸ்பிகே குழுமத்துக்குச் சொந்தமான நூற்பாலை, ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேபோல், எஸ்பிகே குழும உரிமையாளர் செய்யாதுரையின் சொந்த ஊரான கீழமுடிமன்னார்கோட்டையில் இருந்தும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அருப்புக்கோட்டைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாதுரை, அவரது மகன்கள் கருப்பசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் தீபக், ஜோன்ஸ், உதவியாளர் பூமிநாதன் ஆகியோரது வீடுகள், கார்களில் இருந்து ரூ.179.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் செய்யாதுரையின் மகன் நாகராஜனுடன் துணை ஒப்பந்ததாரராக இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதுவரை, செய்யாதுரை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 605 கோடி ரூபாய் பணமும், 354 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வருமான வரித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முடக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளை வங்கி அதிகாரிகள் துணையுடன், லாக்கர்களைத் திறந்து சோதனையிட்டால் கணக்கில் வராத பலகோடி ரூபாய் கரன்சி சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.