இந்திய மீனவர்களை மீட்க போராடிய  இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது, வங்கதேச  எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய பாதுகாப்பு படை வீரர் மரணம் அடைந்துள்ளார். இச்சம்பவம் இந்திய வங்கதேச எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே இந்திய எல்லையில் சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், தற்போது வங்கதேசமும் அதே வேலையில் இறங்கியுள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய எல்லையில், வாலாட்டும் சீனா, பாகிஸ்தான் பட்டியலில் புதிதாக வங்க தேசமும் இணைந்துள்ளது. அதாவது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு,  மேற்கு வங்க மாநிலத்தில் காக்மாரிசார் எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள பத்மா ஆற்றில் இந்திய மீனவர்கள் மூன்றுபேர் படகு மூலம் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இருநாட்டு எல்லைப் பகுதிகளில் அந்த ஆறு உள்ளதால் அந்த ஆற்றுப் பகுதியில்  வங்காளதேசம் எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களில் இருவரை தங்களுடன் விசாரணைக்காக அழைத்துச் சென்ற அவர்கள் ,  ஒரு மீனவரை மட்டும் அனுப்பி இந்திய பாதுகாப்பு படையினரை அழைத்துவர கூறினர்,  அத்துடன் இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் வந்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே  மற்ற இருவர் விடுவிக்கப்படுவர் என அவர்கள் எச்சரித்தனர்.

இதனையடுத்து,  இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் முகாமுக்கு வந்த ஒரு மீனவர் நடந்தவைகள் குறித்து தெரிவித்தார். அதையடுத்து   இந்திய பாதுகாப்பு  படைவீரர்கள் வங்கதேசம் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் முகாமுக்கு சென்றனர்.  அங்கு மீனவர்களை விடுவிக்க வேண்டும் என இரண்டு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.  ஆனால் வங்கதேசம்  படையினர் மீனவர்களை விடுவிக்க ஒத்துக்கொள்ளவில்லை, இதனால் அவர்களிடம் இருந்து மீனவர்களை வலுகட்டாயமாக விடுவித்துக் கொண்டு, இந்திய  படையினர் மீனவர்களுடன் படகில் ஏறி இந்திய எல்லைக்கு திரும்பினார்.  அப்போது சுற்றிவளைத்த வங்கதேச படையினர்  இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதினர்.

 

அதில்  இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விஜய் பவன் சிங் நெஞ்சில்  குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  மற்றொரு வீரர் படுகாயம் அடைந்தார்.  இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வங்கதேச  படையினர் அட்டகாசம் செய்திருப்பது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.