தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது என கர்நாடக அதிமுக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான பெங்களூர் புகழேந்தி, செய்தியாளரிடம் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வரும் 4ம் தேதி காலை சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது தனது திட்டம் குறித்து அவர் விளக்கமாக கூறுவார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் விவரங்களையும், அப்போது, அவர் வெளியிடுவார்.

இந்த சுற்றுப் பயணத்தில் நான், கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் உடன் செல்கிறோம். தமிழகம் முழுவதும் அவர் தொண்டர்களை சந்தித்து கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளார். மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்கள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு பேசுவோம்,

தொண்டர்களையும் நேரில் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்போம். தினகரனுடன் சுற்றுப் பயணத்தில் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ உடன் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலாவை கட்சி தொண்டர்கள் ஏற்று கொண்டார்கள். அவர் சிறையில் இருப்பதால் தன்னுடைய பொறுப்புகளை கவனிக்க துணை பொது செயலாளராக டிடிவி.தினகரனை நியமித்தார். அவரையும் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர்.

அவருடன் இணைந்து திவாகரனும் செயல்படுகிறார். அதிமுகவை வலுவான இயக்கமாக மாற்றவும், பழைய அதிமுக தொடரவும் தினகரனின் சுற்றுப் பயணம் உறுதுணையாக இருக்கும். இந்த நிமிடம் வரை அதிமுக துணை பொது செயலாளராக டிடிவி தினகரன் நீடிக்கிறார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அவர் எப்போது வேண்டுமானாலும் செல்வார். இரு அணிகளும் இணைவதற்கு, அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் 60 நாள் அவகாசம் கொடுத்தார். இதற்காக அவர் தலைமை அலுவலகத்துக்கு இதுவரை செல்லாமல் இருந்தார்.

கட்சியின் நிர்வாகி ஒருவர் கட்சி அலுவலகத்திற்கு செல்ல யாரும் தடை விதிக்க முடியாது. தினகரன் 5ம் தேதி தலைமை அலுவலகம் செல்வது உறுதி. அவர் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.