தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து கோரிக்கை விடுத்ததைப் போல எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவரையும் கடந்த ஆண்டு சந்தித்து செல்லக்குமார் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழகத்தில் ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இருப்பது போல கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளன. இந்நிலையில் பெங்களூருவிலிருந்து கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள பொம்ம சந்திரா பகுதி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப் பணிகளை கர்நாடக அரசு அமைத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கிருஷ்ண்கிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. செல்லக்குமார் இன்று சந்தித்து பேசினார். அவரிடம் மெட்ரோ ரயில் சேவையை ஓசூர் வரை நீட்டித்து தர வேண்டும் செல்லக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

ஓசூர் வரை சேவை
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களை விதான் சவுதாவில் நேரில் சந்தித்து செல்லக்குமார் கோரிக்கை மனு அளித்தார். பெங்களூரு நகரில் இருந்து ஓசூர் நகரம் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஓசூர் நகரத்திலிருந்து பெங்களூருவுக்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வேலை நிமித்தமாகவும் தொழில் நிமித்தமாகவும் சென்று வந்துக் கொண்டிருக்கிறார்கள். ஓசூர் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி வரை கர்நாடக அரசு மெட்ரோ ரயில் ரயில் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை ஓசூர் நகரம் வரை நீடித்தால் இரு நகர மக்களுக்கும் பயனாக இருக்கும் என்று கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தினார்.

எடியூரப்பாவுடன் சந்திப்பு
மேலும் ஓசூர் நகரையொட்டி உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளின் மற்றும் நிறுவனங்களின் தலைமை அலுவலகம் பெங்களூரு நகரில்தான் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனமும் அதிக வருவாய் ஈட்டி தரும் என்பதால், இந்தத் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் செல்லக்குமார் வலியுறுத்தினார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் சந்தித்தபோது எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா உடன் இருந்தார். தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து கோரிக்கை விடுத்ததைப் போல எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவரையும் கடந்த ஆண்டு சந்தித்து செல்லக்குமார் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
