பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு சலுகைகள்  வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நிலை  விசாரணை குழுவின் தலைவர் வினய்குமார்  இன்று சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு  சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு  சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அதற்காக சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் குற்றசாட்டு எழுந்தது.

 குறிப்பாக சசிகலாவுக்கு சிறைச்சாலையில் சமையல் அறை, ஓய்வு அறை, படுக்கை அறை  என மொத்தம் 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், கைதிகள் அணியும் உடையை  அணியாமல் வண்ண உடைகளை சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் அணிந்திருந்ததாகவும்  கூறப்படுகிறது.

இந்த  குற்றச்சாட்டு, நாடு முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்,  கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா ஜூலை 10ம் தேதி சசிகலா உள்ளிட்ட  பல்வேறு கைதிகளுக்கு விஐபி சலுகைகள் வழங்கியிருப்பது குறித்து விரிவான  அறிக்கையை, மாநில சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணாவுக்கு அளித்தார்.இந்நிலையில், குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த  கர்நாடக மாநில அரசு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழுவை அமைத்தது. இந்த குழு  விசாரணையை தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற இவர்கள்  கண்காணிப்பு கேமரா, சிறைச்சாலை பராமரிப்பு, கைதிகளின் அறைகள் உள்ளிட்டவற்றை  ஆய்வு செய்தனர். 

இந்நிலையில் இன்று மீண்டும் சிறைக்கு செல்லும்  உயர்நிலைக் குழுவினர் சசிகலா, இளவரசி ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.