காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. கர்நாடகா மற்றும் கேரள மாநல எல்லைகளில் அந்தந்த மாநில எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பந்த்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆங்காங்கே சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும், ஆளும் அ.தி.மு.க. சார்பில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தை நடத்தினர்.பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தன்னுடைய கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்த முழு அமைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளும், அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.ஏற்கனவே கடையடைப்பு போராட்டம் நடத்திய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இன்று நடக்க இருக்கும் முழு அடைப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளது.  இதே போன்று வெள்ளியன் தலைமையிலான வணிகர் சங்கமூம் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் செய்வதென முடிவு செய்து உள்ளதால் இந்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு அனைத்து அரசு பஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாது என்று தெரிகிறது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆட்டோ தொழிற்சங்கத்தினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இருப்பினும் ஒரு சில ஆட்டோக்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் இன்று திறக்கப்படவில்லை. இரு  வணிகர் சங்கங்களும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி புதுச்சேரியிலும்  முழு அடைப்பு தொடங்கியுள்ளது.

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை செய்து உள்ளது. பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.