நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 13ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

பீஸ்ட் படத்துக்கு தடை :

இந்நிலையில் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாகக் கூறி, குவைத் நாட்டின் அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்திலும் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பீஸ்ட் - பாமக எதிர்ப்பு : 

இந்நிலையில் பீஸ்ட் படத்துக்கு எதிராக பாமகவும் களத்தில் குதித்துள்ளது. இது குறித்து பாமக சிறுபான்மை பிரிவு சார்பாக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முனைவர் ஷேக் முகைதீன் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஒரு விஷயத்தை பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்லும் பேசப்படும் ஒரு அளவற்ற ஆற்றல் மிக்கது சினிமாத்துறை. இதில் நல்ல விஷயங்களை, நல்ல கருத்துக்களை சொன்னால் சிறப்பாக இருக்கும்.

ஆனால் ,சாதி மதங்களை சமயங்களை இழிவாக காட்டும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இப்படங்களில் நடிக்க பல கோடிகளை சம்பளமாகப் பெற்றாலும் தான் நடிக்கும் படத்தில் யாரையும் புண்படுத்தாமல் நடிப்பதை தாங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.குறிப்பாக, பட நடிகர்கள் விஜய், சூர்யா போன்றோர் இதில் கவனமாக இருக்க வேண்டும்.ரசிகர்கள் குறிப்பிட்ட மதம் சாதியை சார்ந்தவர்கள் அல்லாமல் அனைத்து மதம் சாதிகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

பீஸ்ட் - தடை வேண்டும் :

விஜய், சூர்யாவுக்கு அனைத்து மத, சாதியினரும் இவர்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டி இருக்கிறது. அதனால் குவைத்தில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று தகவல் வருகிறது. இப்படி தகவல் பரவ விட்டால் தான் தங்கள் படம் போடும் என்று நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. ஒருவேளை, இப்படத்தில் இச்செய்தி உண்மையாக இருந்தால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு வெளியிடுங்கள்.இல்லையேல், இப்படம் வெளியிடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என பாமக சிறுபான்மைப் பிரிவினர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Thalapathy 66 : விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா... பூஜையுடன் தொடங்கியது தளபதி 66 - வைரலாகும் போட்டோஸ்