இராஜஸ்தான் போன்று தமிழ்நாட்டிலும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்து, பட்டாசுத் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடும், நிரந்தர மாற்று வாழ்வாதாரத்தையும் ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், 

இராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கேலாட் அவர்கள், ராஜஸ்தானில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்துள்ளதையும், முறையான சான்றிதழ் இல்லாது இயங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதையும் முழுமையாக வரவேற்கிறேன்.காற்று மாசுபாடு, கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளானவர்களைப் பெரிதும் பாதிப்பது மட்டுமின்றி, நோயாளிகளின் விகிதத்தையும் அதிகரிக்கச்செய்யும் என்பதை மனதிற்கொண்டு எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை பாராட்டுதற்குரியதாகும். 

 இதேபோன்ற நடவடிக்கைகளை தமிழகத்திலும் செயல்படுத்துமாறும், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களுக்குத் தகுந்த இழப்பீட்டை உறுதி செய்து, பட்டாசுத்தொழிலைச் சார்ந்து இருக்கும் ஆயிரக்கணக்கான பட்டாசுத்தொழிலாளர்களுக்கு நிரந்தர மாற்று வாழ்வாதாரத்தை ஏற்பாடு செய்ய முன்வர வேண்டுமெனவும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்னவலியுறுத்தியுள்ளார். 

பட்டாசு வெடிப்பதால் அதிக அளவில் காற்று மாசு ஏற்பட்டு அது மனித குளத்திற்கு பல்வேறு தீங்கு ஏற்படுத்துவதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் சுகாதாரத்துறை வல்லுனர் எச்சரித்து வரும் நிலையில் சீமான் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். அது மட்டுமின்றி தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்  என்ற இக்கோரிக்கை அதிக கவனத்தை பெற்றுள்ளது.