ban for dmk human chain protest

நாளை நடைபெறுவதாக திமுக அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டத்துக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற தவறிய மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்தபோவதாக கடந்த 20 ஆம் தேதி நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திமுகவின் மனிதசங்கிலி போராட்டத்துக்கு காங்கிரஸ் மார்க்சிஸ்ட் - கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், நாளை திமுக நடத்தும் மனிதசங்கிலி போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சத்தியமூர்த்தி என்பவர் முறையீடு செய்தார்.

இது தொடர்பாக, இந்த முறையீடு மனுவாக தாக்கல் செய்தால் அவசர வழக்காக பிற்பகல் விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து, திமுகவின் மனித சங்கிலி போராட்டத்துக்கு தடைவிதிக்கக்கோரி சத்தியமூர்த்தி, மனுவாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசியல் காரணங்களுக்காக திமுக மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மனித சங்கிலி போராட்டத்தால், பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு - தனியார் நிறுவன பணிக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனால், திமுக அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சத்தியமூர்த்தி அந்த மனுவில் கூறியுள்ளார்.