திமுகவின் பிரச்சாரத்தைக் கண்டு அதிமுக அஞ்சி நடுங்குகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் கூறியிருப்பதாவது: 

திமுகவை கண்டு அஞ்சி நடுங்குவது எல்லாம் பிரியாணி கடைகளும், பியூட்டி  பார்லர்களும், தேங்காய் கடைகளும், வீடுகளுக்கு முன்பு கடப்பாக்கல் போட்டு வைத்திருக்கும் அப்பாவி பொதுமக்களும் தான், அதைவிட இன்னும் ஒருபடி மேலே சொன்னால் திமுக ஆட்சிக்கு வருவது போல் கனவு கண்டால் கூட அவர்களை அழைத்துப் போய் வேப்பிலை அடித்து பரிகாரம் செய்யும் அளவுக்கு பயந்து நடுங்குகிறார்கள் மக்கள்.பதினெட்டு மணிநேர அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டு. பூட்டிக்கிடக்கும் வீடுகளை திறந்து ஆக்கிரமித்து பட்டா போட்டுக் கொண்ட சொத்து அபகரிப்புகள். நில மோசடிகள்,  வாரிசு அற்ற முதியோர்களை குறிவைத்து அதிலும் குறிப்பாக வசதி படைத்தவர்களை இனம் கண்டு அவர்களை கொன்று அவர்களது சொத்துக்களை அபகரித்த நிகழ்வுகள். பட்டப்பகலில் படுகொலைகள், காவல்துறை அதிகாரிகளையே ரோடுகளில் வெட்டி சாய்த்துவிட்டு அதனை அமைச்சர்களே வேடிக்கை பார்த்த கொடூரங்கள். 

சைக்கோ கொலைகள், சரம் சரமாய் கொலைகள். இவை போதாது என்று தமிழகத்தின் மீது படையெடுத்த மீத்தேன், கையில், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட கொடுமைகள். ஜல்லிக்கட்டு உரிமைப் பறிப்பு, காவிரி முல்லைப் பெரியாறு போன்ற தமிழகத்தின் ஜீவாதார விவகாரங்களில் பாராபட்சம். கனிமவள திருட்டு, அதை சுட்டிக் காட்டினால் பத்திரிக்கையாளர்களுக்கு கைவிலங்கு பூட்டுகள், பட்டப்பகலில் பத்திரிக்கை ஊழியர்களை நீதிமன்றத்துக்கு எதிரே வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரங்கள். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே வழக்கறிஞர்கள், காவல்துறையினர் மோதல். நீதிபதிகளின் மண்டை பிளப்பு, கழிவறையில் வழுக்கி விழுந்தேன் என்று நீதியரசரையே இன்று விசாரணை ஆணையத்தில் பிறழ்வு சாட்சி சொல்ல வைத்த பித்தலாட்டம். சட்டக்கல்லூரி மாணவர்களை மோதவிட்டு ரத்தச் சகதியில் அவர்கள் மோதிக்கொள்ள அதனை தங்கள் குடும்ப தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்த அவமானம். தமிழகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடி படகுகள் எல்லாம் பாடைகளாக திரும்பிய கொடூரம். 

 துணைவேந்தர் மீது பல்கலைகழகத்துக்குள்ளேயே புகுந்து தாக்குதல். வருவாய்த்துறை அதிகாரிகளை முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் போன்றோரை கொண்டு அடித்து துவைத்தது. பட்டப்பகலில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உணவு விடுதி ஒன்றில் கருணாநிதி குடும்பத்து பேரனே துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. நீ தான்டா கொலைகாரன் நீ தான்டா கொலைகாரன் என்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி ஊடகத்தினர் மீது பாய்ந்தது. இப்படி பட்டியலிட்டு சொல்ல முடியாத அளவுக்கு தமிழகத்தில் அமைதியை கெடுத்து, தமிழகத்தின் உரிமையை பறித்து, ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுடுகாடாக மாற்றிய திமுகவை நினைத்தால் உண்மையிலேயே அப்பாவி ஜனங்களுக்கு பயம் வரத்தான் செய்யும். இவை யாவுக்கும் மேலாக மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை அதிகாரத்தில் இருந்து கொண்டு ஈழத்தில் நடந்த இன அழிப்பு கொடூரங்களுக்கு துணைபோன இத்தாலி காங்கிரஸுக்கு  மத்தாளம் வாசிப்பதோடு தமிழர்தம் வரிப்பணத்தில் இருந்து வாங்கப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள், ரேடார் கருவிகள் இவற்றோடு சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதற்கான ராணுவத்தினர் என தன் இனத்தையே காட்டிக்கொடுத்தது. திமுகவை நினைத்து அச்சப்படத் தானே வேண்டும். 

அதனால கருணாநிதி பேரன் பால்டாயில் பார்ட்டி மிரட்டுவது ஒருவகையில் உண்மைதான். கடந்த காலத் திமுக ஆட்சியை கண்முன்னே நிறுத்தி உயிரே போனாலும் திமுகவுக்கு ஓட்டு போட்டு விடாதே என்கிற உள்ளத்து அச்சத்தை உதவாத நிதியின் பிரச்சாரம் உருவாக்குவதும் சாத்தியம்தான்.