தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் விதித்துள்ள சிறை தண்டனையை நிறுத்திவைக்கும் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் தற்காலிகமாக அவர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்துள்ளார். 

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டும் என அவர் மனு அளித்ததை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஒரு மாத கால அவகாசம் அளித்து கைது நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அவர் தற்காலிகமாக தபித்துள்ளார். 

தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் கடந்த 1998-ம் ஆண்டு தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது குற்றம்சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மக்கள் பிரதிநிதுத்துவ சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்களின் பதவி பறிக்கப்படும். ஆகையால், பாலகிருஷ்ணா ரெட்டியின் அமைச்சர் பதவி பறிபோவதோடு உடனடியாக அவர் எம்எல்ஏ தகுதையையும் இழப்பார். இதனால் அவரது ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு மேல்முறையீட்டுக்கு செல்ல உள்ளதால் சென்னை சிறப்பு நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ளது.