பேருந்துகள் மீது கல்வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்றதை தொடர்ந்து நேராக முதலமைச்சரை சந்தித்த பாலகிருஷ்ணா ரெட்டி மிகவும் கோபமாக பேசியதாகவும் அதற்கு எடப்பாடி தகுந்த பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கிரிமினில் வழக்குகளில் மூன்று ஆண்டுகளோ அல்லது அதற்கு குறைவான நாட்களோ தண்டனை கிடைக்கும் பட்சத்தில் ஒருவர் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டு மனு தாக்கல் செய்து சொந்த ஜாமீன் பெற்று வெளியே வந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். இதனை பயன்படுத்தியே பாலகிருஷ்ணா ரெட்டி தனது தண்டனையை நிறுத்தி வைக்க வைத்து தற்போது வெளியே வந்துள்ளார். 

ஆனால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதால் பாலகிருஷ்ணா ரெட்டியால் அமைச்சராக தொடர முடியாது. அவரது எம்.எல்.ஏ பதவியும் தானாகவே ரத்தாகிவிடும். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நீதிமன்றத்தில் இருந்து நேராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு உடனடியாக முதலமைச்சரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் காக்க வைத்த பிறகு தான் பாலகிருஷ்ணா ரெட்டியை உள்ளே அழைத்தள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

முதலமைச்சரை பார்த்த மாத்திரத்திலேயே போலீசும் சரி அரசு வழக்கறிஞரும் சரி எனக்கு எதிராகவே செயல்பட்டுள்ளனர் என்று சீரியுள்ளார் பாலகிருஷ்ணா ரெட்டி. மேலும் தனக்கு எதிராக சதி நடைபெற்றுள்ளதாகவும், இதற்கு யார் காரணம் என்று தனக்கு தெரியும் என்றும் எடப்பாடியை பாலகிருஷ்ணா ரெட்டி சீண்டியதாகவும் சொல்லப்படுகிறது. 

அதற்கு இது போன்ற பெட்டி கேசை எல்லாம் ஓசூரிலேயே முடிக்காமல் சென்னைக்கு வரவழைத்தது உன் தப்பு என்று பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி. மேலும் இது சிறப்பு நீதிமன்றம், எம்.எல்.ஏ., எம்.பிக்களுக்கு எதிரான வழக்குகளை மட்டுமே ஸ்பெசலாக விசாரிக்கிறார்கள். மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளை உச்சநீதிமன்றமே கண்காணிக்கிறது- அப்படி இருக்கும் போது எனது துறைக்கு உட்பட்ட போலீஸ் சரியாக செயல்படவில்லை என்றால் நான் தான் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணா ரெட்டிக்கு அடுக்கடுக்காக பதில் அளித்து வாயை அடைத்துள்ளார் எடப்பாடி.

 

மேலும் இந்த விஷயத்தில் தான் செய்வதற்கு எதுவும் இல்லை என்றும் கைவிரித்துள்ளார். மேலும் எங்களுடன் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ, அப்படித்தான் நாங்களும் நடந்து கொள்வோம் என்று சசிகலாவுடனான பாலகிருஷ்ணா ரெட்டியின் தொடர்பை சுட்டிக்காட்டி எடப்பாடி பேசியதாகவும் கூறப்படுகிறது.அமைச்சர் ஒருவருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது அரசுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டாலும், அமைச்சராக இருந்த சசிகலாவின் விசுவாசி ஒருவர் கழட்டிவிடப்படுவதை எண்ணி எடப்பாடி உள்ளிட்டோர் மகிழ்ச்சியாக இருப்பதாகவே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.