bail for sekar reddy

சட்டவிரோதமாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த வழக்கில் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் உள்ளிட்ட மூன்று பேருக்கு 86 நாட்களுக்குப் பிறகு சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் அவரது வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2016 டிசம்பர் மாதம் அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது 131 கோடி ரூபாய் பணமும், 170 கிலோ தங்க நகைகளும் கிடைத்தன. இதில் ரூ.34 கோடி புதிய ரூபாய் நோட்டுகளாக இருந்தது.

மணல் வியாபாரத்தில் கோடிகளைக் குவித்த சேகர்ரெட்டி வருமானத்துக்கு குறைவாகவே கணக்கு காட்டியது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சேகர்ரெட்டி, அவரது சகோதரர் சீனிவாசலு பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். வேலூரில் ரூ.8 கோடி புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாகவும், திருச்சியில் ரூ.1 கோடியே, 50 லட்சத்தை பதுக்கியதாகவும் சேகர் ரெட்டி மீது அடுக்கடுக்காக வழக்குகள் பாய்ந்தன. 

ஜாமீன் கோரி சேகர்ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது வந்தது. இதற்கிடையே இவ்வழக்கு மீதான விசாரணை சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. 

அப்போது சேகர்ரெட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்டு 86 நாட்கள் ஆன பின்பும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று வாதாடினார்.

இதனைத் தொடர்ந்து சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் பிணைத்தொகையுடன் கூடிய நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது, பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.