வந்த வி.ஐ.பி.க்கு ஒரு ஏ.ஸி. போட துப்பில்லையா தி.மு.க.வுக்கு?: ஸ்டாலினின்  தன்மானத்தை உரசிப்பார்த்த காரசாரமான ஆந்திர விமர்சனம். 

சாப்பாட்டில் மட்டுமில்லை சக மனுஷனை விமர்சனம் செய்யும்போது கூட தாறுமாறான கார வார்த்தைகளைப் போட்டுத்தான் வறுத்தெடுப்பார்கள் தெலுங்குவாசிகள். அந்த ரீதியில் சமீபத்தில் சந்திரபாபு நாயுடு டீம் தி.மு.க.வை பார்த்துன் வைத்த ஒரு தெறி விமர்சனம் ஸ்டாலினை நெஞ்சுக்கனக்க வைத்திருக்கிறது. 
என்ன விவகாரம்?....

இந்த தேசத்தின் ஹைடெக் முதல்வர் ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு. மனுஷன் பச்சைத்தண்ணியை வெச்சு கூட பல்பை எறியும் டெக்னிக்கை ஆந்திராவில் அமலபடுத்திவிடுவார். தன் மக்கள் சொகுசாக வாழ வேண்டும் என்று நினைக்கும் அந்த முதல்வர் எந்தளவுக்கு சொகுசாக வாழ்வார்! என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம். 

இந்த சூழலில்...பி.ஜே.பி.க்கு எதிராக ஒன்று சேர்ந்திருக்கும் வகையில் தி.மு.க.வோடு அதிக நெருக்கத்தில்தான் இருக்கிறார் நாயுடு. அந்த வகையில், சமீபத்தில்  அறிவாலயம் வந்திருந்தார் அவர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்திட முடியும்! என்று வல்லுநர்கள் நிரூபித்திருப்பதால், அந்த எந்திரத்துக்கு பதிலாக பழைய வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்திட வேண்டும் என்று குரல் எழுப்பிய நாயுடு, தன் நட்பு கட்சிகளிடம் அதற்கான ஆதரவையும் கோரினார். அறிவாலயம் வந்ததே ஸ்டாலினை சந்தித்து இந்த விஷயத்தை வலியுறுத்த வைக்கும் நோக்கில்தான். 

ஆனால், ஸ்டாலின் பிரசாரத்திற்காக திருவாரூர் சென்றுவிட்டார். ஆனாலும் நாயுடு பெருந்தன்மையாக தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.க்களான பாரதி மற்றும் இளங்கோவனிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த  நிகழ்வில் சென்னை சிட்டியில் போட்டியிடும் தமிழச்சி, தயாநிதி மற்றும் கலாநிதி மூவரும் கலந்து கொண்டனர். 

ஆந்திராவின் முதல்வர், ஹைடெக் தலைவர், எங்கும் எப்போதும் நாகரிகத்தின் உச்சம் பார்க்கும் நபர், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்...இதையெல்லாம் தாண்டி உச்ச பாதுகாப்பு வளையத்தினுள் இருக்கக் கூடிய சென்சிடீவ் வி.வி.ஐ.பி. என்றெல்லாம் தெரிந்தும் கூட அந்த நிகழ்ச்சி நடந்த சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலான நேரம் ஏ.ஸி.யை போடாமல் வெறும் ஏர் கூலரை வைத்தே ஓட்டியிருக்கின்றனர். பாவம்  வியர்வையில் நனைந்து நனைந்து...நாயுடு, நனையுடு ஆகிவிட்டார். 

தன் கையிலிருந்த டவலால் முகம், கழுத்து என்று அவர் துடைத்து துடைத்து அவதிப்பட்டதை அவரது உதவியாளர்கள் மற்றும் முக்கிய நபர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

கிளம்பி ஆந்திரா சென்ற பின்னும் கூட அவர்களால் தங்கள் முதல்வர் நாயுடுவுக்கு நடந்த சம்பவத்தை அவர்களால் மறக்க முடியவில்லை. தெலுங்கு பக்கம் செல்வாக்கு வைத்திருக்கும் துரைமுருகன் தரப்பில் இதை பேசி, புகாராக கொண்டு செல்லலாம் என நினைத்தால், அவரோ ரெய்டு பஞ்சாயத்தில் பியூஸ் போய் கிடந்தார். எனவே தி.மு.க.வின் வேறு முக்கிய நபர்களுக்கு போன்போட்டு ‘நாயுடுகாரு எவ்ளோ முக்கியமான வி.வி.ஐ.பி. அவரை போயி இப்படி பண்ணிட்டீங்களே?’ என்றதும் சிலரோ ‘பொதுவா தளபதி (ஸ்டாலின்) இருந்தால்தான் ஏ.ஸி. போடுவாங்க’ என்று வழக்கமாக தாங்கள் அனுபவிக்கும் கொடுமைக்கு சேர்த்து பழிவாங்கும் வகையில் போட்டுக் கொடுத்துள்ளனர்.  

உடனே ’தமிழகத்தையே அண்ட கட்சி. இந்தியாவிலேயே பெரிய அரசியல் செல்வாக்கு வெச்சிருக்கும் கட்சி.  சக மாநில முதல்வர் வர்றப்ப ஏ.ஸி. போட கூட துப்பில்லையா?’ என்று அவர்கள் பதிலுக்கு பொங்கிவிட்டனர். இதில் துணுக்குற்ற வேறு சில தி.மு.க. வி.ஐ.பி.க்களோ ’அப்படியில்ல. அன்னைக்கு மெகா ஏ.ஸி. மெஷின்ல ஏதோ பிரச்னை. சிரமத்துக்கு மன்னிக்கணும். நாங்க தளபதிட்ட இதை சொல்லிடுறோம்.” என்று சமாதானம் செய்தார்களாம். 

விவகாரம் ஸ்டாலினின் கவனத்துக்கு போக, நாயுடுவுக்கு நடந்த அசெளகரியத்தைம், அதற்கு கிடைத்திருக்கும் மோசமான விமர்சனத்தையும் நினைத்து மனசு கனத்துவிட்டாராம். ஏமண்டி, ஆந்திராவுல இருந்துகிட்டு வியர்வைக்கு பயந்தா எப்புடி?