குழந்தை சுர்ஜித்தை மீட்க முடியாதது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள மதுரை மணிகண்டன் இனி இப்படி ஒரு விபத்து நடக்கக் கூடாது எனவும் மாறி நடந்து விட்டால் குழந்தையை உடனே தூக்கும் வகையில் பலவிதமான ரோபோட்டிக் இயந்திரங்களை தயாரிக்க போவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து  பேட்டியளித்துள்ள அவர்,  நான் வடிவமைத்த ரோபடிக் எந்திரம் மூலம் சங்கரன்கோவில் ஆழ்துளை  கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்டேன்,  அதே அடிப்படையில் மணப்பாறை நடுக்காட்டு பட்டியல் விழுந்த சுர்ஜித்தை மீட்க வரும்படி  திருச்சி கலெக்டர் தொலைபேசியில் அழைத்தார்.  அதனை அடுத்த சிறிது நேரத்தில் மதுரை தீயணைப்பு தென் மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கார் ஒன்று வேகமாக வந்தது. அதிலேறி  மதுரையிலிருந்து நடுக்காட்டிக்கு  மிக வேகமாக வந்தேன்.

 

அங்கு வந்தவுடன் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினேன்,  ஆனால் குழந்தை சிக்கியிருந்த  ஆழ்துளை கிணற்றின் சுற்றளவு நான்கரை அங்குலமாக  இருந்தது ஆனால் நான் வைத்திருந்த  எந்திரத்தின் அகலம் 8 அங்குலம், எனவே உடனே மணப்பாறையில் உள்ள ஒரு லேத் பட்டறைக்கு சென்று என்னுடைய எட்டு அக்குல எந்திரத்தை  நான்கரை அங்குலமாக குறைத்துக்கொண்டு வந்தேன் அதற்குள் மாநில தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  அவர்களுடன் இணைந்து  குழந்தையை மீட்க என்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்தேன். ஆனால் குழந்தை  சிக்கிக்கொண்டு இருந்த ஆழ்துளைக் கிணற்றில் சிறிது கூட இடைவெளி இல்லாததால் ரோபோட்டிக் எந்திரத்தால் சுஜித் இன் தலைப்பகுதியை பிடிக்க முடியவில்லை என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், தீவிரமாக குழந்தையை மீட்க முயற்சிகள் நடந்துகொண்டிருந்தபோது, குழந்தை அடுத்தடுத்த ஆழத்திற்கு சரிந்துவிட்டான்.  இதனால் எங்கள் முயற்சிகள் பலனில்லாமல் போனது.  குழந்தை உயிருடன் இருக்க முடியாமல் போனது எனக்கு மிகுந்த மன வலியை தந்துள்ளது இதுபோன்ற சம்பவம் இனியும் நடக்கக்கூடாது. அப்படி ஏதும் சம்பவம் நடந்து விட்டாலும் கூட  குழந்தையை உடனே மீட்கும் வகையில் பல்வேறு அளவுகளில் ரோபோடிக் எந்திரங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளேன் என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.