தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டங்களுக்கு வெளிநாட்டு சதிதான் காரணம் என யோகா குருவும், காவி தொழிலதிபருமான பாபா ராம் தேவ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாகஅவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டுள்ளதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி பொது மக்கள் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மிக அமைதியான முறையில் 100 நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டம் 100 ஆவது நாளில் பெரும் கலவரமாக மாறியது.

இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. சிபிசிஐடி விசாரணை மற்றும் ஓய்வு பெற்ற  நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் கமிஷன் என தொடர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் யோகா குருவும், பதஞ்சலி நிறுவனத்தின் காவி முதலாளியுமான பாபா ராம்தேவ், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உரிமையாளர் வேதாந்தா அனில் அகர்வாலுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாபா ராம்தேவ் அண்மையில் லண்டன் சென்று வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வாலைச் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளத்தை உருவாக்குவதின் மூலம் இந்தியாவை கட்டடமைக்கும் பணிகளில் அனில் அகர்வாலின்  பங்களிப்பிற்கு தான் தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களின் பின்னணியில் வெளி நாட்டு சதி இருப்பதாகவும், அதன் காரணமாகத்தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பொது மக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாகவும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.

வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பாவி உள்ளூர் மக்களை சர்வதேச சதிகாரர்கள் குழப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகள் நாட்டின் வளர்ச்சிக்கான கோவில்கள். எனவே அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் மூடக்கூடாது என்றும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார். பாபா ராம்தேவின் இந்த டுவிட்டர் பதிவு தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.