கலைஞரின் காலத்திலேயே அரசியல் வாரிசு போட்டி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே துவங்கி விட்டது. இதை இப்படியே விட்டால் திமுகவிற்கே ஆபத்தாகிவிடும் என்று பயந்த கலைஞர் அப்போதே ஸ்டாலினை அரசியல் வாரிசாக தேர்வு செய்து கொண்டார்.  செயல் தலைவர் ஆக்கி முக்கி பொறுப்பில் இருத்தினார். அதே சமயம் அழகிரியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். அவரது அரசியல் சாணக்கியத்தால் இதுவரை இந்த அழகிரி மற்றும் ஸ்டாலின் இடையேயான பனிப்போரை கட்டி காத்துவந்த கலைஞரின் மறைவு, இப்போது திமுகவிற்கு பெரும் இழப்பாகி இருக்கிறது.

அவரது மறைவிற்கு பின்னர் தற்போது மீண்டும் மோதிக்கொள்ள தயார் நிலையில் இருக்கின்றனர் ஸ்டாலினும் அழகிரியும். அழகிரியின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது தெரிந்திருந்தும் அவரை கண்டு கொள்ளாமல் இருந்த ஸ்டாலினுக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறார் அழகிரி.

திமுக விசுவாசிகள் என்பக்கம் என்று அவர் கூறியதும், திமுக உடையும் என்று பரபரப்பை ஏற்படுத்தியதும் ஸ்டாலின் தரப்பினருக்கு அழகிரி மேலு கடும் கோபத்தை கிளப்பி இருக்கிறது. இந்த கடுப்பில் அவர்கள் பேசிய வார்த்தைகள் தற்போது அழகிரிமனதில் எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றியது போல ஆகிவிடவே, கலைஞரின் சமாதி முன் தான் சொன்னவற்றை நிரூபித்து காட்ட தயாராகி வருகிறார் அழகிரி.


வரும் செப்டம்பர் 5 ,கலைஞர் மறைவின் 30வது நாள், அன்று கலைஞருக்காக இரங்கல் பேரணி ஒன்றை நடத்த இருக்கிறார் அழகிரி. இந்த கூட்டத்தில் தன்னுடைய பலம் என்ன என்பதை நிரூபித்திட தற்போது மிகப்பெரிய அளவிலான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அழகிரி.

இதற்கிடையே அழகிரியின் இந்த செயல்பாடுகளுக்கு எல்லாம் காரணமே பா.ஜ.க தான் என்று திமுகவினர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. அதை நிரூபிப்பது போல அழகிரி சமீபத்தில் தெரிவித்த கருத்து வேறு அமைந்திருக்கிறது. 

சில தினங்களுக்கு முன் காலமான முன்னாள் பிரதமரும் , பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கட்சி நிகழ்ச்சிகள் எதையும் திமுக தள்ளி வைக்காததை விமர்சித்திருக்கிறார் அழகிரி. இதனால் அவர் மீது பாஜகவினரின் கவனம் அதிகரித்திருக்கிறது.

இதனால் அழகிரி நடத்தவிருக்கும் இந்த இரங்கல் ஊர்வலத்தில் பாஜவினர் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திமுகவில் ஸ்டாலின் அதிருப்தியாளர்கள் என ஒரு கோஷ்டி இருப்பதாகவும் அவர்களுக் இங்கு வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேறு ஸ்டாலினும் ,அழகிரியும் சேர்ந்து செயல்பட வேண்டும் என கூறி இருப்பதால் அவரது ஆதரவு அழகிரிக்கு சம பங்கு இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

ஏற்கனவே அழகிரிக்கு மதுரையில் நல்ல செல்வாக்கு இருப்பதால் அங்கிருந்து அவருக்கென ஒரு படையே திரண்டு வரும் என்பதில் உருதியாக இருக்கும் அழகிரி, கொங்கு மண்டலத்தின் மீது தன் கவனத்தை செலுத்தி இருக்கிறார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து , கணிசமான தொண்டர்களை இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வைக்க ஒருங்கிணைப்பு வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்ட செயலர் முத்துசாமி எதிர்ப்பாளர்கள், 'மாஜி' மாவட்ட செயலர் ராஜா அணியில் இருந்து விலகியவர்கள் போன்றோரை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகள் தற்போது நடந்தேறி வருகிறது.


இதில் அழகிரி ஆதரவாளர்கள் சேர்ந்த ரகசிய கூட்டம் ஒன்று, சென்னி மலையில், நேற்று முன்தினம் ரகசியமாக நடந்திருக்கிறது. இதில், ஈரோடு மாவட்ட அழகிரி அணியில், தீவிரமாக செயல்படும் சக்திவேல் என்பவர் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார், 'தி.மு.க., தலைவர் அஞ்சலி கூட்டத்துக்கு, நமது மாவட்டத்தில், குறைந்தது, 10 பஸ்களில் வரு மாறு அழகிரி கூறியுள்ளார்.' அதனால் முத்துசாமியை பிடிக்காமல் அங்கிருந்து ஒதுங்கிய நிர்வாகிகள், உள்ளூர் எதிர் கோஷ்டியினர் ஆகியோரிடம் ஆதரவு திரட்டுங்கள்' என்றிருகிறார் இதேபோல் கொடுமுடி, பெருந்துறை, மொடக் குறிச்சி பகுதிகளிலும் கூட்டம் நடந்துள்ளது. 

சக்திவேலிடம் கேட்ட போது, 'அழகிரியின் பலம், மெரினாவில் நிரூபிக்கப் படும். நாங்கள் ரகசிய கூட்டம் நடத்தவில்லை. தி.மு.க.,வில் உள்ள நண்பர்களை தான் சந்தித்திருக்கிறோம் என்றார். அழகிரி அணிக்கு, ஆள் திரட்டும் பணியால், ஈரோடு மாவட்ட, தி.மு.க. அல்லோலப்பட்டு கொண்டிருக்கிறது.

இதனிடையே நெல்லையில் கலைஞருக்கான இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ள பல முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் அவர் மீது கோபத்தில் இருக்கும் பலர் அழகிரி நடத்த போகும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் செப்டம்பர் 5 அன்று மெஹா மாஸ் காட்டுவார் அழகிரி என்று பெரிதளவில் இப்போதே எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கின்றன அரசியல் வட்டாரத்தில்.