தி.மு.க.வில் தன்னால் ஓரம் கட்டி ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு பொதுக்குழுவில் முன்னுரிமை கொடுத்து மு.க.ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தி.மு.க.வில் கலைஞர் தலைவராக இருந்த போதே மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளை நியமனம் செய்யும் அளவிற்கு பவர் ஃபுல்லாக இருந்தார். மாநிலம் முழுவதும் தனக்கு வசதியாக இருப்பவர்களை மட்டும் நிர்வாகிகளாக வைத்துக் கொண்டு தனக்கு சரிப்பட்டு வராதவர்களை ஓரம் கட்டும் வேலையை ஸ்டாலின் நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கினார். 

ஸ்டாலினின் இந்த நடவடிக்கையால் முதலில் பாதிக்கப்பட்டவர் தஞ்சை பழனிமாணிக்கம். தி.மு.கவில் நீண்ட காலம் எம்.பியாக இருந்தவர். இரண்டு முறை மத்திய அமைச்சர் பதவி வகித்தவர். எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். மேலும் தஞ்சை மாவட்டத்தை தி.மு.கவின் கோட்டையாக தொடரச் செய்தவர் என்று பழனிமாணிக்கத்தை பற்றி கூறிக் கொண்டே செல்லலாம். தஞ்சை மாவட்டச் செயலாளராக இருந்த கோ.சி.மணியை மாற்றிவிட்டு பழனிமாணிக்கத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின் தான். ஆனால் பிற்காலத்தில் பழனிமாணிக்கம் கனிமொழியுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். 

இதனால் பழனிமாணிக்கத்தை காலி செய்யும் திட்டத்துடன் இருந்த ஸ்டாலினுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தல் நல் வாய்ப்பாக அமைந்தது. கலைஞருக்கு நெருக்கமான டி.ஆர்.பாலு தஞ்சை தொகுதியில் போட்டியிட ஆசைப்பட்டார். இதனை பயன்படுத்திய கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் பழனிமாணிக்கத்திற்கு சீட் கொடுக்காமல் டி.ஆர்.பாலுக்கு சீட் கொடுத்தார் ஸ்டாலின்.

இதற்கு பழனிமாணிக்கம் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பழனிமாணிக்கம் ஆதரவாளர்கள் பாலுவுக்கு எதிராக வேலை பார்த்தனர். இதனால் டி.ஆர்.பாலு தஞ்சை தொகுதியின் எம்.பியாக முடியவில்லை. மேலும் சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமாருக்கு சீட் கேட்டார். ஆனால் ஒரத்தநாடு தொகுதியை ஸ்டாலின் ஒதுக்கினார்.

 இதனால் அந்த தொகுதி தங்களுக்கு வேண்டாம் என்று வெளிப்படையாக அறிவித்து ஸ்டாலினுக்கே அதிர்ச்சி கொடுத்தார் பழனிமாணிக்கம். சட்டப்பேரவை தேர்தல் முடிந்த உடன் பழனிமாணிக்கத்தின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அத்தோடு அவர் கட்சியிலும் ஓரம்கட்டப்பட்டார்.

ஆனால் பொதுக்குழுவில் பழனிமாணிக்கத்திற்கு பேச ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனென்றால் தான் ஒதுக்கிய தொகுதியை வேண்டாம் என்று கூறி ஓரம்கட்டப்பட்ட ஒருவரை மீண்டும் முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச வைத்தது அவருக்குள் ஏற்பட்ட பெரிய மாற்றம் என்றே கூறப்படுகிறது.வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பழனிமாணிக்கம் மேடையில் உணர்ச்சிப் பெருக்குடன் பேசி அசத்தினார். 

இதே போலத்தான், கோவை பொங்கலூர் பழனிச்சாமி, தேனி மூக்கையாத் தேவர் போன்றோரும் ஸ்டாலினால் ஒதுக்கப்பட்டவர்கள். இவர்களில் பொங்கலூர் பழனிசாமி தற்போது வரை அழகிரியுடன் தொடர்பில் இருப்பவர் என்று சொல்லப்படுகிறது. காவேரி மருத்துவமனையில் கூட அழகிரியுடன் பேசிக் கொண்டிருந்த ஒரே தி.மு.க நிர்வாகி பொங்கலூர் பழனிசாமி தான். ஆனால் இதனை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவரையும் பொதுக்குழுவில் பேச அனுமதித்தால் ஸ்டாலின். அழகிரியின் மிக நெருக்கமான ஆதரவாளராக இருந்த மூக்கையாத்தேவர் சில சமயங்களில் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மூக்கையாத் தேவருக்கும் பொதுக்குழுவில் பேச ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தார். இது குறித்து பொதுக்குழுவில் பேசிய துரைமுருகன், கட்சியில் ஒரு காலத்தில் செல்வாக்காக இருந்து தற்போது ஒதுங்கியவர்களுக்கு ஸ்டாலின் பொதுக்குழுவில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக வெளிப்படையாக கூறினார். ஸ்டாலினும் கூட தான் புதிதாக பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே ஸ்டாலினிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அவருக்கும், கட்சிக்கும் உதவுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.