அப்பா அழகிரி மற்றும் சித்தப்பா ஸ்டாலின் ஆகிய இருவருமே திறமைசாலிகள் தான் என அழகிரியின் மகன் துரை தயாநிதி தெரிவித்துள்ளார். 

கடந்த 2014ம் ஆண்டு கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அழகிரி. அதற்கு முன்பாக அவர் திமுக தென்மண்டல பொறுப்பாளராக இருந்துவந்தார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். கருணாநிதியின் மறைவிற்கு பிறகு மீண்டும் கட்சியில் இணைய அழகிரி முற்படுவதாக தகவல்கள் வந்தன. 

அதற்கேற்றாற்போல் கருணாநிதியின் நினைவிடத்தில் அதிரடி பேட்டி ஒன்றும் கொடுத்தார். கருணாநிதியின் உண்மை விசுவாசிகளும் திமுக தொண்டர்களும் தன் பக்கமே உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தனது பலத்தை காட்டும் விதமாக ஒருலட்சம் ஆதரவாளர்களுடன் கருணாநிதி நினைவிடத்திற்கு பேரணி செல்லப்போவதாக அறிவித்தார். அதற்காக தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனையும் நடத்தினார்.

 

இதற்கிடையே ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டுவருகிறார். அழகிரி அமைதியாக இருந்துவருகிறார். வரும் செப்டம்பர் 5ம் தேதி கருணாநிதி நினைவிடத்தை நோக்கி அழகிரி தலைமையில் பேரணி செல்ல உள்ளனர்.

ஸ்டாலினையும் அவரது தலைமை பண்பையும் கடுமையாக விமர்சித்துவந்த அழகிரி, அண்மையில் அளித்த பேட்டியில், தங்களை இணைத்துக்கொள்ளத் தயார் என்றால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், எஃப்.எம் ஒன்றிற்கு பேட்டியளித்த அழகிரியின் மகன் துரை தயாநிதி, திமுகவின் உண்மையான அடித்தட்டு தொண்டர்கள் கோரிக்கை விடுத்ததால்தான் பேரணி நடத்துவதாகவும் அதில் ஒரு லட்சத்துக்கும் மேலான தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் 5ல் நடக்கும் இந்த பேரணி தங்கள் பலத்தை காட்டும் பேரணி அல்ல; கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியாகவே இருக்கும் எனவும் துரை தயாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் திமுகவில் சேர்த்துக்கொள்ளும்படி கருணாநிதியை தவிர தனது தந்தை அழகிரி, வேறு யாரிடமும் தொடர்புகொண்டு கேட்டதில்லை என துரை தயாநிதி தெரிவித்துள்ளார். திமுகவில் சாதாரண தொண்டனாக இருந்து அதனை ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பதே தனது ஆசை எனவும் அதற்கு சாதகமான பதில் சித்தப்பாவிடம்(ஸ்டாலின்) இருந்து வரும் எனவும் துரை தயாநிதி நம்பிக்கை தெரிவித்தார். 

அப்பா அழகிரி, சித்தப்பா ஸ்டாலின் ஆகிய இருவருமே திறமைசாலிகள் எனவும் துரை தயாநிதி தெரிவித்துள்ளார். ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என அழகிரி கூறியிருந்த நிலையில், தற்போது அழகிரியின் மகன், ஸ்டாலினை புகழ்ந்து பேசியிருக்கிறார். இவையனைத்துமே எப்படியாவது மீண்டும் கட்சியில் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காக செய்யப்படும் செயல்களாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.