கலைஞரின் உடல் நிலை குறித்து விசாரிக்க வருகை தரும் தலைவர்கள் யாரும் மு.க.அழகிரியை சந்திக்காமலேயே புறப்பட்டுச் செல்கின்றனர்.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே மு.க.அழகிரியும் உடன் இருக்கிறார். தனது மனைவி காந்தி, மகன் தயா மற்றும் சகோதரி செல்வி குடும்பத்தினர் உள்ளிட்டோருடன் அழகிரி ஒரு அறையில் இருக்கிறார். அறையில் அவ்வளவாக அழகிரி யாருடனும் பேசுவதில்லை. அவ்வப்போது கலைஞர் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் மட்டும் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் கலைஞரின் உடல் நிலை குறித்து விசாரிக்க வருகை தரும் தலைவர்கள் நேராக ஸ்டாலினை சந்தித்துவிட்டு புறப்பட்டுச் சென்றுவிடுகின்றனர். இதுவரை எந்த ஒரு தலைவரும் அழகிரியை சந்திக்கவில்லை. மத்திய அமைச்சராக இருந்தவர், கலைஞரின் மகன் அப்படி இருக்கையில் வரும் தலைவர்கள் ஒரு நட்புறவாக கூட தன்னை சந்திக்காமல் செல்வதால் அழகிரி அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் வரும் தலைவர்களையும் தி.மு.க தலைமை கழக நிர்வாகிகள் நேராக ஸ்டாலின் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கிருந்து நலம் விசாரித்துவிட்டு தலைவர்கள் நேராக வெளியே சென்று விடுகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் போன்றோர் வந்த போது அழகிரியை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் குலாம் நபி ஆசாத்  மத்திய அமைச்சராக இருந்தவர். அழகிரியும் மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.

எனவே அந்த நட்பின் அடிப்படையில் குலாம் நபி ஆசாத்தாவது தன்னை சந்திப்பார் என்று அழகிரி எதிர்பார்த்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரையும் வந்த கையோடு விசாரிக்க வைத்துவிட்டு தி.மு.க நிர்வாகிகள் வெளியே அனுப்பி வைத்தனர். குலாம் நபி ஆசாத்திடம் அழகிரியும் அங்கு தான் இருக்கிறார் என்கிற தகவலை கூட தி.மு.க நிர்வாகிகள் சொல்லவில்லை என்று சொல்லப்படுகிறது. இது தான் அழகிரி ஆத்திரம் அடைய காரணம் என்று சொல்லப்படுகிறது. கலைஞரின் உடல் நிலை குறித்து ஸ்டாலினை விட மூத்தவனனான என்னிடம் யாரும் விசாரிக்கமாட்டார்களா? வருபவர்களை எல்லாம் ஸ்டாலினை சந்திக்க வைத்துவிட்டு அனுப்பி வைக்கிறார்கள்? என்று அழகிரி ஆதங்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே சமயம் தலைவர்கள் வரும் போது அந்த அறைக்கு கனிமொழி வந்துவிடுகிறார். அதே போல் அழகிரியும் வருவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கின்றனர் ஸ்டாலின் தரப்பினர். ஆனால், அழகிரி தான் தலைவர்கள் இருக்கும் அறைக்கு வராமல் வேறு ஒரு அறையில் அமர்ந்து இருப்பதாகவும் அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.