சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அதனை அமல்படுத்த கேரள ஆளும் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் அய்யப்ப பக்தர்கள் இளம் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் கனக துர்கா, பிந்து என்ற இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர். இது அய்யப்ப பக்தர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்ககோரி மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர் கோடு வரை 30 லட்சம் பெண்கள் பங்கேற்ற வனிதா மதிலுகள் என்ற மனித சுவர் போராட்டம் நடைபெற்றது.

சபரிமலை சீசன் முடிந்த நிலையில் பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் 'சபரிமலை கர்ம சமிதி' ஐயப்ப பக்தர் சங்கமத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து  திருவனந்தபுரம் புத்தரி கண்டம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வனிதா மதிலுகள் போராட்டத்துக்கு சவால் விடும் வகையில் அய்யப்ப பக்தர்கள் திரண்டு பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பல லட்சம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

பொது மேடைகளுக்கு வராத மாதா அமிர்தானந்தமயி இந்த கூட்டத்தில்  பங்கேற்றுப் பேசினார்.  சபரிமலை ஐதீகம் பற்றி தெரியாததால்தான் பல துரதிருஷ்ட சம்பவங்கள் நடந்துவிட்டன. ஆண், பெண்களுக்கு தனித்தனி பள்ளிகள் நடத்தப்படுவதால் அது பாலின பாகுபாடு என்று கூறமுடியாது. அதுபோலதான் சபரிமலையும் என அவர் தெரிவித்தார்..

அய்யப்ப பக்தர்களின் இந்த திடீர் போராட்டம் ஆளும் மாக்சிஸ்ட் கட்சியின் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.