ஆந்திராவில் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து.. ரகசிய இடத்தில் வைத்தியர்.. முக்கிய புள்ளிகளுக்கு பார்சல்.
ஆனந்தய்யாவின் மருந்து கொரோனாவுக்கு எடுத்தகையாக கேட்கிறது என கூறப்படுவதால், ஆனந்தய்யாவை தூக்கிச் சென்று திருமண மண்டபத்தில் ரகசியமாக தங்க வைத்துள்ள ஆளுங்கட்சியை சேர்ந்த புள்ளிகள், மிகப்பெரிய அளவில் மருந்தை உற்பத்திசெய்து, ஆந்திரம், தெலுங்கானா டெல்லியில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆந்திர ஊடகங்கள் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளன.
ஒட்டுமொத்த நாடும் கொரோனாவில் சிக்கி அல்லோ குல்லோ பட்டு வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு மருந்து தயாரித்த ஆயுர்வேத வைத்தியரை அலேக்காக தூக்கி சென்று ரகசிய இடத்தில் வைத்து, விஐபிகளுக்கு மட்டும் மருந்து பார்சல்கள் அனுப்பப்படுவதாக வெளியாகியிருக்கிற தகவல் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று கொரோனாவில் இருந்து மீள ஒட்டுமொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணபட்டினம் முத்துகூறு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்பவர் பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி வைத்தியம் பார்த்து வருகிறார்.
கார்ப்பரேட் கம்பெனிகள் முதல் பிரபல ஆயுர்வேத பெருநிறுவனங்கள் வரை இதோ கொரோனாவுக்கு நாங்கள் மருந்து கண்டுபிடிவிட்டோம் என கள்ளச் சந்தைகளில் கூப்பாடு போட்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணபட்டினர் ஆனந்தய்யாவும், தனது தொண்டரடிப்பொடிகளுடன் பல மூலிகைகளை மிக்ஸ் செய்து கொரோனாவுக்கு மருந்து தயாரித்துள்ளார். அது நல்ல பலன் கொடுப்பதாக கூறப்படுகிறது, இந்த தகவல் ஆந்திர மாநிலத்தில் காட்டுத் தீயாய் பரவ அவரிடம் மருந்து வாங்க பக்கத்து மாநிலத்தில் இருந்தெல்லாம் மக்கள் கார்கள் மூலம் கிருஷ்ணா பட்டணம் குவிய தொடங்கினர். இது ஒரு கட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் காதுக்கு எட்ட, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்து உண்மையிலேயே கொரோனாவை குணப்படுத்துகிறதா என்று ஆய்வு செய்யுமாறு ஐ.சி.எம்.ஆர் குழுவுக்கு உத்தரவிட்டார். மருந்து குறித்து முடிவு வரும் வரை ஆனந்தய்யாவின் மருந்து விநியோகத்தை நிறுத்துமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
களத்தில் குதித்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆனந்தய்யாவின் மருந்து விநியோகத்தை முற்றிலுமாக தடுத்தனர். இதனையடுத்து ஆந்திர மாநில அரசு நியமனம் செய்த மருத்துவர் குழு, கிருஷ்ணபட்டினம் சென்று, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்ததில் அது முழுக்க முழுக்க மூலிகைகளால் உருவாக்கப்பட்ட மருந்து என அறிக்கை அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது. ஆனந்தய்யாவின் மருந்து கொரோனாவுக்கு எடுத்தகையாக கேட்கிறது என கூறப்படுவதால், ஆனந்தய்யாவை தூக்கிச் சென்று திருமண மண்டபத்தில் ரகசியமாக தங்க வைத்துள்ள ஆளுங்கட்சியை சேர்ந்த புள்ளிகள், அவரை வைத்து மிகப்பெரிய அளவில் மருந்தை உற்பத்திசெய்து, ஆந்திரம், தெலுங்கானா டெல்லியில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆந்திர ஊடகங்கள் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளன.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நிலையில், ஆனந்தய்யா தயாரிக்கும் மருந்தை திருப்பதியில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில், எலிகள், முயல்களுக்கு கொடுத்து பரிசோதனை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்த பிறகு அது தொடர்பான முடிவுகள் மத்திய, மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அதற்கு அரசுகள் அனுமதி வழங்கினால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உதவியுடன் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் மருந்து தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவோம் என சந்திகிரி தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி கூறியுள்ளார். இதற்கிடையில் நெல்லூரில் ஆனந்தய்யா தயாரித்த மருந்து பாக்கெட்டுகள் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆனந்தய்யாவை கடத்தி வைத்து கமுக்கமாக மருந்து தயாரித்து ஆளுங்கட்சியினர் வினியோகிக்கும் தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டிய விஷயத்தை ஏன் இப்படி மறைத்து வைத்து, கள்ளத்தனமாக செய்யவேண்டும், உடனே அந்த ஆயுர்வேத வைத்தியரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுகின்றன.