நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு, ‘நன்றி நெய்வேலி’ என்று தெரிவித்துள்ளார்.
 ’பிகில்’ பட வருமானம் தொடர்பாக நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன், சினிமா தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் உள்பட 38 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம், சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நெய்வேலியில் சூட்டிங்கில் இருந்த விஜயை வருமான வரித்துறை கையாண்டவிதம் பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தது. விசாரணையை முடித்துக்கொண்டு மீண்டும் நெய்வேலிக்கு சூட்டிங்கிற்கு வந்தார் விஜய். ஆனால், சினிமா சூட்டிங் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக தொண்டர்கள் சிலர் என்.எல்.சி. முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்தப் போராட்டத்துக்கு பதிலடி தரும் வகையில் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். இதனையத்து ரசிகர்களைக் கலைக்க தொழில் பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். இதனையடுத்து விஜய் நேரில் வந்து ரசிகர்களை கலைந்து போகச் செய்தார். மேலும் சூட்டிங் இடையே ரசிகர்களைச் சந்தித்த விஜய் செல்பியும் எடுத்துக்கொண்டார். படப்பிடிப்பு வேன் மீது ஏறியும் ரசிகர்களை நோக்கி விஜய் கையசைத்தார். 
இந்நிலையில், இன்று தன் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அந்தப் பதிவில், “நன்றி நெய்வேலி” என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் அதிகளவில் பகிரத் தொடங்கியுள்ளார்கள். இதனால் சமூக ஊடகங்களில் அந்தப் படம் வைரலாகிவருகிறது.