தன் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக ஹாலிவுட்டின் எக்ஸ்பர்ட்டுகளை நாடுவது கமலின் வழக்கம். கடந்த பல வருடங்களாக அவரது படங்களில் ஹாலிவுட் டெக்னீஸியன்களின் பங்கு அதிகம். அந்த ஹைடெக்தனத்தின் நுணுக்கங்களும், ஆச்சரியங்களும், உன்னதங்களும் சில நேரங்களில்  இந்திய ரசிகனுக்குப் புரியும், பல நேரங்களில் புரிந்து கொள்ளும் திறன் அவனிடம் இருக்காது. இதனால் கமலின் படம் வணிக ரீதியாக ‘பிளாப்’ முத்திரை குத்தப்படும். 

இதே போன்றதொரு பகீர் முயற்சியைதான் இப்போது தன் அரசியலிலும் கமல் எடுக்கிறார்!  இது வேண்டாத வேலை! என்று புலம்பிக் கொட்ட துவங்கியுள்ளனர் அவரது கட்சியின் மேல்நிலை நிர்வாகிகள். 
அது என்ன முயற்சி?

“கடந்த 18 மற்றும் 19 தேதிகளில் கோயமுத்தூரில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்- கட்சி நிர்வாகிகளுக்கு பயிலரங்கம் நடந்தது. இதில் ஆந்திராவை சேர்ந்த அவினாஷ் என்பவர் அரசியல் களத்தில் எப்படி செயல்பட வேண்டும்? என்பது பற்றி வகுப்பெடுத்திருக்கிறார். 

இந்த அவினாஷ் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் வேலை பார்த்து பின் அமெரிக்காவில் குடியேறியவராம். அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் போது டிரம்புக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கியவர். தேர்தல் பிரசாரங்களின் போது ஹிலாரி தாறுமாறான முன்னிலையில் இருந்தது போல் ஒரு பிம்பத்தை உலகம் பார்த்தது. ஆனால் இறுதியில் வென்றதோ டிரம்ப். இந்த ஆச்சரியம் கைகூடியதில் அவினாஷின் பங்கும் உண்டு என்பது டிரம்ப் தரப்பு நம்பிக்கை. 

இந்த விஷயத்தை சமீப சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்த கமலுக்கு அவரது நண்பர்கள் விளக்கி, அவினாஷையும் அறிமுகம் செய்து வைத்தனராம். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பி.ஜே.பி. இப்படித்தான் ஒரு கன்சல்டன்ஸியை தங்கள் பிரச்சாரத்துக்காக அறிமுகம் செய்தது. கார்ப்பரேட்டான அந்த நபர்கள் மோடிக்காக இந்தியாவின் கடைக்கோடி வறண்ட கிராமம் வரை இறங்கி உழைத்து பெரும் வெற்றிக்கு கணிசமான காரணமாகினர். 

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட ஸ்டாலினுக்காக உழைத்த ‘நமக்கு நாமே’ டீம் அவரை முதல்வராக்காவிட்டாலும் கூட எதிர்கட்சித்தலைவராக்கியது. அ.தி.மு.க. முரட்டு மெஜாரிட்டியுடன் ஜெயிக்காமல் ஜஸ்ட் தப்பிப் பிழைக்க இந்த டீமின் பணியும் முக்கிய காரணம்.  இதையெல்லாம் தன் சூப்பர் கம்ப்யூட்ட மூளைக்குள் ஓடவிட்டுப் பார்த்த கமல், அவினாஷை ஓ.கே. செய்துவிட்டார். அந்த அவினாஷ்தான் இப்போது ம.நீ.ம. நிர்வாகிகளுக்கு அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார். 

இது தன் கட்சியின் உத்வேகத்துக்கு பெரிதும் கைகொடுக்கும்! என கமல் நம்புகிறார்.” என்பது தகவல். 

இது இப்படியிருக்கும் அதேவேளையில் கமல்ஹாசனின் இந்த ‘ஆபரேஷன் அவினாஷ்’ விஷயத்தில் அவரது கட்சி நிர்வாகிகளுக்கே ஈடுபாடும், நம்பிக்கையுமில்லை. ‘அமெரிக்க தேர்தலையும் இந்திய தேர்தலையும் ஒரே கோட்டில் வெச்சு பார்க்க கூடாது. மக்களின் மன நிலையிலாரம்பிச்சு எல்லாமே இங்கே வேற! வேற! எனவே நம்ம தலைவர் பண்றதுன் வீண் முயற்சி. அதைவிட்டுட்டு இறங்கி லோக்கலா உழைச்சு மக்கள் மனசை கவர்றதுதான் பலன் கொடுக்கும்.” என்று தங்களுக்குள் ஆதங்கப்பட்டுக் கொள்கிறார்களாம். 

ஆனால் இதையெல்லாம் ‘நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு சொல்லலை! ஆனா நாலு கால் இருந்தா நல்லா இருந்திருக்கும்!னுதான் சொல்றேன்’ என்று வளவளக்கும் கமலிடம் யார் போய் சொல்வது? என்பதுதான் பிரச்னையே.