திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திமுக சார்பில் நடந்த போராட்டத்துக்கு விவசாயிகளும் பொதுமக்களும் திரண்டு வந்து ஆதரவு அளித்தனர். இந்தப் போராட்டத்தால் தமிழகத்தில் உள்ள எல்லா நகரங்களும் ஸ்தம்பித்துபோயின. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் செய்த சேலத்தில், எட்டு திக்கிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த ஆர்ப்பாட்டம் நடக்கக்கூடாது என்று திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.


இதுபோன்ற கைது நடவடிக்கைகள் எடுப்பதால் திமுகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் விரைவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்பற்கு சாட்சியாகும். செம்மொழி ஆய்வு மையத்தை கர்நாடகா மாநிலத்திற்கு மாற்றுவதை இந்த அரசு தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குப் போக முடியாது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தவுடன் கர்நாடகவிலிருந்த இந்த ஆய்வு மையத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தார் கருணாநிதி.


ஆனால், இந்த ஆட்சியாளர்கள் அதனை திரும்பவும் கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல விட்டால், தமிழ் ஆர்வலர்களும் தமிழர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் அதிமுகவுக்கு இலையுதிர் காலம் தொடங்கிவிட்டது. தேர்தல் வரும்போது அதிமுகவின் கூடாரம் காலியாகி விடும்” என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.