தேனி மாவட்டம்  போடிநாயக்கனூரில் செவ்வாய் கிழமை இரவு, ஆட்டோவுடன் சொகுசு கார் மோதிய விபத்தில் பள்ளி சிறுவன் உட்பட 2 பேர் இறந்து போனார்கள். போடி புதூரை சேர்ந்தவர் முருகன் மகன் அரவிந்த் (26). இவர் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். முந்தலில் சிலரை பக்கத்து கிராமத்தில் இறங்குவதற்காக அரவிந்தின் ஆட்டோவில் சென்றுள்ளனர். இவர்களுடன் அரவிந்தின் பக்கத்து வீட்டை சேர்ந்த காமராஜ் மகன் லோகேஷ்வரன் (12) என்ற சிறுவனும் சென்றுள்ளார்.  

ஆட்களை இறக்கிவிட்டு அரவிந்தும், சிறுவன் லோகேஷ்வரனும் மட்டும் ஆட்டோவில் போடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது போடி மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டி ஓடை அருகே வந்தபோது எதிரில் வந்த சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியதில் அரவிந்தும், லோகேஷ்வரனும் பலத்த காயமடைந்தனர். இருவரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததில் இருவரும் இறந்து போனார்கள்.

விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் சென்னை போரூரை சேர்ந்த ராஜேஸ் (39) சாப்ட்வேர் இஞ்சினியர் என்பதும், இவர் குடும்பத்துடன் மனைவியின் ஊரான போடி அருகே திம்மிநாயக்கன்பட்டிக்கு கோவில் திருவிழாவிற்காக வந்தவர்கள் என்றும், உணவருந்துவதற்காக போடி மூணாறு சாலையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டதும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து போடி குரங்கணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.