August No 1 jayalalitha by mk stalin
ஜெயலலிதாவின் படம் இன்று திறக்கப்பட்ட விவகாரம் தமிழக சட்டமன்றத்தை இன்று பப்படம் ஆக்கிக் கொண்டிருக்கிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களான, எதிர்கட்சி உறுப்பினர்கள் அமர வேண்டிய இடத்தில் அ.தி.மு.க.வின் மாஜி வகையறாக்கள், மாவட்ட செயலாளர்கள், மாஜி எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரை அமர வைத்து இன்று தமிழக சட்ட மன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவப்படத்தை திறந்திருக்கிறது தமிழக அரசு.

இந்த விவகாரம் ஒட்டு மொத்தமாக எதிர்கட்சியான தி.மு.க.வை கடுப்பேற்றி இருக்கிறது. நின்ற நிலையில் போட்டோவில் இருக்கும் ஜெயலலிதா எதிர்கட்சியனர் அமரும் வரிசையை பார்க்கும் திசையில் மாட்டப்பட்டுள்ளது ஒரு வகையில் ஸ்டாலின் டீமுக்கு கடுப்பு. அதுமட்டுமல்லாது ஜெயலலிதாவின் படங்களை அரசு கட்டிடங்களில் வைப்பதற்கு தடை கேட்டு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பு வரும் நிலையில் அவசர அவசரமாக இந்த படத்தை எடப்பாடி அரசு திறந்துள்ளது என்றும் கடுப்பாகிறார் ஸ்டாலின்.
இன்று அறிவாலயத்தில் இது தொடர்பாக வெளிப்படையாக வெடித்திருக்கும் அவர், “ஜெயலலிதாவின் படத்தை அ.தி.மு.க.வின் அலுவலகங்களில் திறந்து கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் அவரது படத்தை திறந்தது பெரும் அத்துமீறல்.

யார் ஜெயலலிதா? அக்யூஸ்ட் நம்பர் 1 என்று நீதிமன்றங்களால் உறுதிப்படுத்தப்பட்டவர். அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் எங்கே இருந்திருந்தால் எங்கே இருந்திருப்பார்? சசிகலாவோடு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்திருப்பார். ஆக சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை சட்டமன்றத்தில் அத்தனை மரபுகளையும் மீறி திறந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் மட்டுமல்ல பாராளுமன்றத்திலும் திறப்போம்! என்று பெருமை பேசியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். இந்த படத்தை திறக்க தமிழக கவர்னர், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ஆகியோரிடம் டைம் கேட்டனர். ஆனால் யாரும் வராமல் மறுத்துவிட்டனர். இந்த லட்சணத்தில் பாராளுமன்றத்தில் எப்படி குற்றவாளி ஜெயலலிதாவின் போட்டோவை திறக்க முடியும்? இந்த கேள்விக்கு ஜெயக்குமார் எனக்கு பதில் சொல்ல வேண்டும். “ என்று வெளுத்து வாங்கியுள்ளார் ஸ்டாலின்.
