9-ஆம் தேதி முழு முடக்க நாளுக்கு மறுநாளே கடையடைப்பு நடத்துவது விவேகம் அல்ல என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்  தா.வெள்ளையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஏ.எம் விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ள நிலையில், வெள்ளையன் இவ்வாறு கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஓரளவுக்கு நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மீண்டும் கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க வேண்டுமென வியாபாரிகள் அரசை வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்று சம்பந்தமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி, கொரோனா இல்லாத வளாகமாக உருவாக்க அனைத்து வணிகர்களும் தயாராக உள்ளனர். முதல் கட்டமாக கோயம்பேடு வணிக வளாக உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள நோயெதிர்ப்பு பரிசோதனையை மேற்கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக உறுதி அளிக்கிறோம்.

எனவே, ஐந்து மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காய்கறி வணிக வளாகத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் திறக்க அரசு துரித நடவடிக்கை எடுக்காவிட்டால், முதற்கட்ட போராட்டமாக ஆகஸ்ட் 10-ஆம் தேதி கோயம்பேடு வணிக வளாகம் திறப்பதற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி ,பூ, பழ சந்தைகள் மற்றும் கடைகள் அனைத்தும் ஒரு நாள் முழு அடைப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த போராட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு  வணிகர் சங்கமான தா.வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், 9 ஆம் தேதி அரசின் முழு  அடைப்புக்கு மறுநாளே கடையடைப்பு நடத்துவது விவேகமானது அல்ல என கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோயம்பேடு அங்காடியை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது, இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு எங்கள் பேரவை சென்ற வாரம் எழுதியிருந்த கடிதத்தில், கோயம்பேடு அங்காடியை திறக்க வேண்டிய அவசியம் எழுந்து இருப்பதற்கான காரணங்களை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருந்தது. 

இப்படிப்பட்ட ஒரு நிலையில், கோயம்பேடு அங்காடியை மீண்டும் திறக்க கோரி நடத்தும் எந்தப் போராட்டமும் நியாயமானது என்றே எங்கள் பேரவை கருதுகிறது. அதேசமயம் வணிகர்கள் நடத்தும் போராட்டங்கள் கொரோனா கால இக்கட்டான நிலையில், அறிவுப்பூர்வமாகவும், முன்னெச்சரிக்கையுடன் திட்டமிடப்பட வேண்டும் என்பதில் எங்கள் பேரவை தெளிவாக இருக்கிறது. கடையடைப்பு நடத்துவதற்காக ஆகஸ்ட் 10-ஆம் தேதியை தேர்ந்தெடுப்பது எந்தவிதத்திலும் விவேகம் அல்ல. ஆகஸ்டு 9-ஞாயிற்றுக்கிழமை அரசு முழு அடைப்பு அமல்படுத்தும் நிலையில், மறுநாளே கடைகளை அடைப்பது பொறுப்பற்ற செயல் ஆகிவிடும்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் ஞாயிறன்றும், திங்களன்றும் கடைகள் அடைக்கப்பட்டால்  முதல் நாளான சனிக்கிழமை அன்றும் மீண்டும் கடைகள் திறக்கப்படுகின்ற செவ்வாய்க்கிழமை அன்றும் கடைகளில் மக்கள் குவிவதை தவிர்க்க முடியாது போய்விடும். அது தேவையற்ற கொரோனா பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டால் அந்த பழியில் இருந்து வணிகர்கள் சமூகம் விடுபட முடியாது. எனவே முழு முடக்க நாளான ஞாயிற்றுக் கிழமைக்கு மறுநாளே பொறுப்பற்ற முறையில் அறிவிக்கப்பட்டு இருக்கிற கடையடைப்பு போராட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையை சார்ந்த லட்சோப லட்சம் வணிகர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பதை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். கடையடைப்பு முதலான எந்தப் போராட்டத்தையும், அனைத்து வணிகர் அமைப்புகளுடன் கலந்து பேசி கூடிய விரைவில் அறிவிப்போம் என்றும் மீண்டும் கோயம்பேடு தொடர்பாக முதல்வருக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுப்போம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.