நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யபட்டுள்ளது. சென்னையில்  கடந்த 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய அப் பத்திரிக்கையின் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி தற்போது உச்சநீதிமன்றம்,  மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் வாதிகளால் நியமிக்கபட்டவர்கள், யார் மூலமாவது யார் காலையோ பிடித்து தான் அவர்கள் நீதிபதிகளாக வந்துள்ளனர். இது வருத்தபட வேண்டிய விஷயம்,  ஊழல் செய்பவர்களை நீதிமன்றங்கள் தண்டிப்பது இல்லை, தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இதுபோன்று நடைபெறாது என குருமூர்த்தி பேசியிருந்தார். 

அவரின் இந்த பேச்சு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் இந்த பேச்சுக்கு பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்  பேசியுள்ள குருமூர்த்தியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பின. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர்  நீதித்துறையை களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி முறையீடு செய்துள்ளார். 

அவரது முறையீட்டையேற்ற நீதிபதிகள் அதை மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறித்தினர். இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக சில தினங்களில் மனு தாக்கல்  செய்யப்படும் என வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.  நீதிபதிகள் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்து உள்ளார். அதாவது நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் என கூறுவதற்கு  பதில் நீதிபதிகள் என்று குறிப்பிட்டு விட்டேன், நீதித்துறை, நீதிபதிகள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் என குருமூர்த்தி விளக்கம் அளித்திருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது.