ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனா முதல் அலையை விட 2வது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு 6,000-ஐ கடந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்தார். 

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரன் தேர்தல் முடிந்ததில் இருந்தே சளி தொல்லை மற்றும் சோர்வுடன் காணப்பட்டார். மேலும், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது.

இதனையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.