கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு காவல் ஆணையர் செல்லும் நுழைவு வாயிலின் அருகே தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பு காவல் ஆணையர் செல்லும் நுழைவு வாயிலருகே இன்று மதியம் 2 மணியளவில் வந்த இளைஞர் ஒருவர் தன்மீது மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். 

இதைக் கண்ட அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து அவர்மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர்.அவரிடம் விசாரித்தபோது அவர் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஹரிநாத் என்பதும், கடந்த 11 ஆம் தேதி குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராரில் தந்தை ஜெய்சிங் மற்றும் சகோதரி சங்கீதா ஆகியோரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியதாகவும் தெரிவித்தார்.

மேலும், தனது குடும்பத்தினர் சொத்துக்காக தன்னை தாக்கியதோடு மனநலம் பாதிக்கப்பட்டவனாக தன்னை சித்தரித்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறி பலவாறு புலம்பினார். இதனையடுத்து அவரிடம் தகவல்களை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் அந்த இளைஞரை கூடுதல் விசாரணைக்காக வேப்பேரி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவல் ஆணையர் அலுவலகம் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.