சட்டப்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக காங். அரசிடம் கேட்டுப்பெறுவாரா தமிழக.காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை சசுந்தரராஜன்.

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் காலை முதல் இரவு வரை காலிக்குடங்களுடன் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு குடம் தண்ணீர் கிடைப்பதே அரிது என மக்கள் புலம்பி வருகின்றனர். தற்போது குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு தரப்பில் இருந்து லாரி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.9 ஆயிரத்து 100 டிரிப் மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்து என அனைத்து பகுதிகளுக்கும் லாரி சர்வீஸ் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, சென்னையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளதாக தெரிவித்திருந்தார். தண்ணீர் பிரச்சனையில் எந்த ஓட்டல்களையும் மூடவில்லை என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளர். தண்ணீர் பிரச்சனையால்தான் சென்னையில் ஓட்டல்களை மூடப்படுவது எனக்கூறுவது தவறான பரப்புரை எனவும் குறிப்பிட்டார். 

இந்நிலையில், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் பொய் சொல்லி இருக்கிறார். பக்கத்து மாநில முதல்வர்களை சந்தித்து 2 டி.எம்.சி. நீரையாவது தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’சட்டப்படி கொடுக்க வேண்டிதையும் கொடுக்க மறுக்கும் கர்நாடக காங். அரசு.? கேட்டுப்பெறுவாரா தமிழக காங். தலைவர்? தவிக்க வைக்க மேகதாதுவில் அணை கட்ட துணை போகும் காங்?’’ எனப் பதிவிட்டுள்ளார்.