athiest should assured that do not speak about hindu said h raja

இந்து மதத்தையும் மதம் சார்ந்த விஷயங்களையும் விமர்சிக்க மாட்டோம் என்று நாத்தீகர்கள் உறுதியளிக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இந்து மதத்தையோ மதம் சார்ந்த நம்பிக்கைகளையோ விமர்சித்தோ கிண்டலடித்தோ ஏதேனும் கருத்து வெளிவந்தால், முதல் எதிர்ப்புக் குரல் எச்.ராஜாவிடம் இருந்தே வரும். மெர்சல் திரைப்படம் முதல் ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் உரை வரை அனைத்திற்குமான எதிர்ப்பு குரல் ராஜாவிடம் இருந்தே தொடங்கும்.

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்க ஆய்வு கட்டுரையின் வாக்கியத்தை மேற்கோள் காட்டியதாகவும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் வைரமுத்து கூறிய பின்பும் கூட அவருக்கு எதிராக போராட்டங்களும் அவர் மீதான விமர்சனங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதற்காக, அவரை மிகவும் இழிவாகவும் கொச்சையாகவும் விமர்சித்திருந்தார் எச்.ராஜா. எச்.ராஜாவின் இழிவான விமர்சனத்திற்கு இயக்குநர் பாரதிராஜா, சீமான் ஆகியோர் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மதங்களைப் பற்றியோ அந்த மதங்களின் புனித நூல்களை பற்றியோ யாரும் விமர்சிப்பதில்லை. விமர்சிக்க தயங்குகிறார்கள். எனவே அதுபோலவே, நாத்தீகர்கள் என்ற பெயரில் இருப்பவர்கள், இந்து மதத்தை பற்றியும் இந்து மக்களின் நம்பிக்கைகள் மற்றும் புனித நூல்களைப் பற்றியும் பேசமாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்படி உறுதியளித்தால் வைரமுத்து விவகாரத்திற்கு முடிவு காணப்படும் எனவும் எச்.ராஜா தெரிவித்தார்.