விழுப்புரம்

நான்தான் அடுத்த தலைவர் என 67 வயதில் ரஜினி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று ரஜினியை விளாசினார் டி.டி.வி. தினகரன் எம்எல்ஏ.
 
விழுப்புரத்தில் டிடிவி தினகரன் அணி மாவட்ட தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு டி.டி.வி.தினகரன் பேசியது:  "தமிழகத்தில் நல்ல நிர்வாகம் மூலம் வளர்ச்சிப் பணியை வழங்க முடியும். 

நீர்ப்பாசனத் திட்டத்தால் விவசாயத்தை மேம்படுத்தவும் செய்யலாம். சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத தொழிற் சாலைகளை கொண்டுவர முடியும். வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க முடியும். 

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளதால், தமிழகத்துக்கு விலக்களிக்க மட்டுமே கோர முடியும், அதனை அரசு செய்ய வேண்டும். 

இதுபோன்ற உரிமைகளை நாம் போராடிப் பெறுவதற்கு, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை அதிகளவில் பெற வேண்டும். இதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். 

நமது பணிகளை தொழில் நுட்பப் பிரிவினர் சமூக வலைதளங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்ய வேண்டும். சட்டவிரோதமான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.

அமைச்சர் சி.வி. சண்முகம், எம்எல்ஏ குமரகுரு போன்ற ஆளும் கட்சியினரின் நெருக்கடியால், மாநிலம் முழுவதும் பலர் நமது அணிக்கு வருகின்றனர். அனைத்துப் பகுதிகளிலும் நமக்கு கிளைகள் உள்ளன. இப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளில் நம்மால் வெற்றி பெற முடியும்.
 
தமிழக அரசியல் தலைமையின் வெற்றிடத்தை யார் நிரப்புவார்? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்குள்ளாகவே, நான்தான் அடுத்த தலைவர் என 67 வயதில் ரஜினி தம்பட்டம் அடித்துக் கொள்வதை என்னவென்று சொல்வது? என்று அவர் பேசினார்.