தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை தமிழக அரசு நேற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து இந்த 18 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும், டிடிவி.தினகரனுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த ஆண்டு 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அமர்வு விசாரித்தது தீர்ப்பு வழங்கியது. 

இந்நிலையில் இருநீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.சத்திய நாராயணன் இந்த வழக்கை விசாரித்து கடந்த மாதம் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி, 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று நீதிபதி அறிவித்தார். 

ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை, இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக டிடிவி.தினகரன் அதிரடியாக அறிவித்தார். அந்த தீர்ப்பின் சாராம்சம் 475 பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. இந்த தீர்ப்பின் நகல் சமீபத்தில் தமிழக அரசுக்கு கிடைத்தது. அதன் நகலை தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு அனுப்பி வைத்தார். 

 இனி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த தீர்ப்பு நகலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைப்பார். இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் அதை பரிசீலித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தலை நடத்தும் பணிகளை மிக விரைவில் தொடங்க உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.