அதிமுகவும் திமுகவும் சமபலத்துடன் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்த கூட்டணிக்கு சாதகமான சூழல், அங்கு போட்டியிட யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் 33வது மாவட்டமாக கடந்த ஜனவரி மாதம் உதயமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும், ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகள் திமுக வசமும் தற்போது உள்ளது. 4 தொகுதிகளை தங்கள் வசப்படுத்த இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இந்த சூழலில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு வாங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி, உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வசந்தவேல் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடியின் ஆதரவும், மக்கள் செல்வாக்கும் உள்ள தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவிற்கு 
மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட சரியான வேட்பாளர் இல்லாததால் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் மணிரத்னம் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. அல்லது அங்குள்ள பெரிவாரியான தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை கவர விடுதலை சிறுத்தைகள் கட்சி அல்லது இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பிரபுவை விட முன்னாள் எம்எல்ஏ அழகுவேல் பாபு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. 

ரிஷிவந்தியம் தொகுதியை பொறுத்தவரையில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ வசந்தம் காத்திகேயனுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் என்பதால் மீண்டும் அவரே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மோகனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அவர் விரும்பவில்லை என்றால் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுருவின் ஆதரவாளர் எஸ்.கே.டி.சி.சந்தோஷ் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இங்கு போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றதால் ரிஷிவந்தியம் தொகுதியை தேமுதிக மீண்டும் கேட்டுப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. 

சங்கராபுரம் தொகுதியில் திமுக சார்பில் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினராக உள்ள உதயசூரியனுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக சார்பில் தற்போதைய தமிர்நாடு சக்கரை இணையத்தின் தலைவர் ராஜசேகர் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. அவருக்கு வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் அங்கு முன்னாள் அமைச்சர் மோகன் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இரு கட்சிகளும் சரிக்கு சமமான தொகுதிகளை கை வசம் வைத்திருப்பதால் கள்ளக்கறிச்சி மாவட்டம் எந்த கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.