தமிழக சட்டமன்ற தேர்தலில் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி, கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என்பதை அதிமுக மீண்டும் நிரூபித்துள்ளது.

கொங்கு மண்டலம் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. ஜெயலலிதா காலத்திலும் கூட இதே நிலையே நீடித்தது. அதிலும் குறிப்பாக, கோவை மாவட்டம் அதிமுகவை அதீதீவிரமாக ஆதரிக்கும் மாவட்டமாக இருந்து வந்தது. கால் நுாற்றாண்டு காலமாக நடந்த அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும், அதிமுகவே அதிகளவு தொகுதிகளில் வென்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்படும் முன் நடந்த, 2006 சட்டமன்றத் தேர்தலில், 14 தொகுதிகளில் 10 தொகுதிகளை வென்ற அதிமுக,  2011 தேர்தலில் திருப்பூர் பிரிக்கப்பட்ட பின், கோவையில் இடம் பெற்ற 10 தொகுதிகளையும் மொத்தமாக வென்றது.

கடந்த, 2016 தேர்தலில் 10ல் 9 தொகுதிகளை வெற்றி பெற்றனர். ஆனால், அவர் மறைந்த பின் நடந்த, 2019 நாடாளுமன்ற தேர்தலில், கொங்கு மண்டலத்திலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது.ஜெயலலிதா இல்லாத காரணத்தால், இனி அதிமுக வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதற்கேற்ப பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவே வெல்லும் என்று கூறப்பட்டது. ஆனால், அதை யெல்லாம் முறியடித்து, கோவையில் அனைத்துத் தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளும் தற்போது அதிமுக வசம் வந்திருக்கின்றது. அதேபோல, தருமபுரி மாவட்டத்திற்கு  5  தொகுதிகளையும், திருப்பூர் மாவட்டத்திலும் 8 ல் 6 தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. சேலத்தில் 11 தொகுதிகளில் 10ல் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் திமுக அமோக வெற்றி பெற்றாலும் கோவை மற்றும் தருமபுரியை முழுவதுமாக இழந்துள்ளது.